புதுடில்லி:”2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழலில் வேறு சில மத்திய அமைச்சர்களுக்கும் தொடர்பு உள்ளது என, பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.
நஜாப்காரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு, நிதின் கட்காரி பேசியதாவது:”2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம், மத்திய அமைச்சர் ராஜா மட்டும் பயன் பெறவில்லை. இதில், காங்கிரஸ் தலைவர்களுக்கும் பங்கு உள்ளது. ஊழல் பணம், சென்னைக்கு மட்டும் போகவில்லை.இந்த ஊழலால் காங்கிரஸ் தலைவர்களும், அமைச்சர்களும் பலனடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில், ராஜா மட்டுமல்லாமல், அதில் தொடர்புடைய மற்ற அமைச்சர்களும் பதவி விலக வேண்டும்.காமன்வெல்த் போட்டியின் போது, வீரர்களுக்கு வீடு கட்டுவதிலும், ஸ்டேடியங்கள் கட்டுவதிலும் ஊழல் நடந்துள்ளது. விளையாட்டு கிராமத்தை உருவாக்குவதில், 2,000 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது.
இந்த வீடு கட்டிய, கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவர், காங்கிரஸ் தலைவர் ராகுலின், அரசியல் செயலர் உறவினர். விளையாட்டு ஸ்டேடியங்களை கட்டுவதிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களில் விளையாட்டு ஸ்டேடியம் அமைக்க, 40 முதல் 45 கோடி ரூபாய் வரை செலவாகிறது. ஆனால், ஜவகர்லால் நேரு ஸ்டேடியம், 980 கோடி ரூபாயில் பழுதுபார்க்கப்பட்டுள்ளது.கடந்த 2003ல் நடந்த விளையாட்டுப் போட்டிகளின் போது, செலவானதை விட, இந்த ஆண்டு நடந்த விளையாட்டுப் போட்டிகளுக்கு ஆறு மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர், நிதியமைச்சர் உள்ளிட்டோர், இதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.
Leave a Reply