ஸ்பெக்ட்ரம் ஊழல் சர்ச்சை-அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ராஜா

posted in: அரசியல் | 0

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஏலத்தில் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படக் காரணமாக அமைந்தார் என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து கடும் இழுபறிக்குப் பின்னர் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஏ.ராஜா நேற்று இரவு பதவியிலிருந்து விலகினார்.


தனது ராஜினாமாக் கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து அவர் அளித்தார்.

முன்னதாக அவர் சென்னையில் முதல்வர் கருணாநிதியுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். முதல்வரின் ஆலோசனையின் பேரில் டெல்லிக்கு நேற்று இரவு வந்த அவர் பிரதமரை நேரில் சந்தித்து ராஜினாமாக் கடிதத்தை அளித்தார்.

ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து விட்டு வெளியே வந்த ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடாளுமன்றத்தில் ஆளும் கூட்டணிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காவும் அவை நடவடிக்கைகள் சுமுகமாகவும் அமைதியாகவும் நடைபெற உதவிடும் நோக்கிலும் எனது தலைவர் கருணாநிதி கேட்டுக்கொண்டதற்கு இணங்க நான் பதவி விலகுகிறேன் என்று தெரிவித்தார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஏலம் தொடர்பான சிஏஜி இறுதி அறிக்கை சமீபத்தில் பிரதமரிடம் அளிக்கப்பட்டது. அதில், ராஜா மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டிருந்தன. மேலும், பிரதமரின் உத்தரவுகளையும் ராஜா மீறியதாக புதிய சர்ச்சைகளும்வெடித்தன. ராஜாவுக்கு எதிராக முன்னாள் தொலைத் தொடர்புத் துறை செயலாளர் மாத்தூரும் பேட்டி அளித்திருந்தார்.

இதனால் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கி ஒரு நிகழ்ச்சி கூட நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இன்று உச்சநீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணைக்கு வருகிறது. நாடாளுமன்றமும் நடைபெற முடியாமல் ஸ்தம்பித்துப் போயிருப்பதால் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க பிரதமரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் முடிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து, சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் நேற்று பிற்பகல் சந்தித்துப் பேசினர். அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

இதையடுத்து காங்கிரஸ் மேலிடம் மற்றும் மத்திய அரசின் முடிவு திமுகத் தலைமைக்குத் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முதலில் ராஜா விலக வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையை முதல்வர் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் பிரணாப் முகர்ஜியே கருணாநிதியிடம் பேசி, நிலைமை கை மீறிப் போயுள்ளது. நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு பெரும் நெருக்கடி எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் பிரதமருக்கு சிக்கல் ஏற்படும். மேலும் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது மத்திய அரசு கடுமையாக கண்டிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. இந்த தர்மசங்கடத்தைத் தவிர்க்க உதவுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார் பிரணாப். மேலும், ராஜா விலக வேண்டும் என்பது பிரதமரின் முடிவு என்றும் கருணாநிதியிடம் தெரிவிக்கப்பட்டதாம்.

இதன் பின்னரே முதல்வர் கருணாநிதி, ராஜாவை அழைத்து ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் அளிக்குமாறு உத்தரவிட்டதாக தெரிகிறது.

முன்னதாக ராஜா மீது எந்தக் குற்றமும் இல்லை. முந்தைய அமைச்சர்கள் என்ன அணுகுமுறையைக் கடைப்பிடித்தார்களோ அதையேதான் ராஜாவும் செய்தார்என்று முதல்வர் கருணாநிதி கூறியிரு்நதார். இந்தக் கருத்தையே மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் கனிமொழி மூலம் திமுக தலைமை நேரிலும் வலியுறுத்தியிருந்தது.
Read: In English
மேலும் தான் ராஜினாமா செய்யும் கேள்விக்கே இடமில்லை என்றும் ராஜாவும் பேட்டி அளித்திருந்தார். ஆனால் நேற்று திடீரென அவர் ராஜினாமாக் கடிதத்தைக் கொடுத்துள்ளார். ராஜா விவகாரம் தொடர்பாக நேற்று டெல்லியில் பெரும் பரபரப்பான அரசியல் சூழல் நிலவியது.

இந் நிலையில் ராஜாவின் ராஜினாமா கடிதத்தை பிரதமர் ஏற்றுக் கொண்டுவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *