1.76 லட்சம் கோடி விவகாரத்தில் மத்திய அரசின் மவுனம் கலைவது எப்போது?

posted in: அரசியல் | 0

அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக, பார்லி கூட்டுக்குழு விசாரணை குறித்து மத்திய அரசின் மவுனம் எப்போது கலையும் என்பது மர்மமாக உள்ளது.

இந்த மவுனத்திற்கு விடை தெரியாமல், விட்டேனா பார் என எதிர்க்கட்சிகள் “கை’கோர்த்து நிற்பதால் ஆறாவது நாளாக பார்லிமென்ட் முடங்கிப் போய் உள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் பெரிதாக வெடித்து, அதையொட்டி பல்வேறு பிரச்னைகள் கிளைவிடத்துவங்கியுள்ளன. ஆனால், இந்த விவகாரம் துவங்கியதில் இருந்து, பார்லிமென்டை ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால், பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடரின் பணிகள் அனைத்துமே ஸ்தம்பித்துக் கிடக்கிறது. ராஜா ராஜினாமாவை அடுத்து, கூட்டுக் குழு விசாரணை தேவை என்று கூறி, எதிர்க்கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த முட்டுக்கட்டையை நீக்கவும், சுமுகமான முறையில் பார்லிமென்டை நடத்துவதற்காகவும், எதிர்க்கட்சிகளுடன் அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசினார். ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எதிர்க்கட்சிகள் பிடிவாதம் பிடித்து வருகின்றனர். நேற்று காலை பார்லிமென்ட் கூடியதும் இரு அவைகளும் சில நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டன. எங்களுக்கு தேவை, ஜெ.பி.சி., தான் என்று அந்த ஒரு வார்த்தையை முழங்கி வருகின்றனர். பதிலுக்கு மத்திய அரசோ, முதலில் “பிஏசி’ அப்புறம் பார்ப்போம் என்கிறது. இப்படி விட்டேனா பார் என இருதரப்பும் இருப்பதால் ஆறு நாளாக பார்லிமென்ட் முடங்கிவிட்டது.

எதிர்க்கட்சிகளின் பிடிவாதத்தை உணர்ந்த அரசு தரப்பு, அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில்,” பார்லிமென்டின் கூட்டுக்குழுவை அமைக்க தயார், அப்படி அமைக்கும் பட்சத்தில் 1998ம் ஆண்டிலிருந்தே விசாரணையை நடத்த வேண்டும், சம்மதமா’ என்று கேட்டதாக தெரிகிறது. இதற்கு, காரணம் ஏலம் விடுவதை தவிர்த்து விட்டு, வருமான பங்கீட்டு அடிப்படை முறையை அறிமுகப்படுத்தியதே பா.ஜ.,தான் என்றும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்திற்காகவே அப்போதைய அமைச்சர் ஜக்மோகனை பதவியில் இருந்து விலகச் செய்ததும் பா.ஜ.,தான் என்று காங்கிரஸ் தரப்பு கூறுகிறது. இதனால், பார்லி., கூட்டுக்குழு அமைப்பது குறித்து இரு தரப்புக்கும் முட்டுக்கட்டை நீடிக்கிறது.

இதற்கிடையில், வரும் திங்கள் அல்லது செவ்வாய் அன்று சுப்ரீம் கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் வழக்கு வரும்போது, நீதிபதிகள் ஏதேனும் கருத்துக்கள் தெரிவித்தால், எதிர்க்கட்சிகளின் குரல் மீண்டும் வலுவாக கிளம்பவும் வாய்ப்புள்ளது. இருதரப்புக்கும் இடையில் விடை தெரியாத புதிர் போல் நீண்டு கொண்டு போனால், பார்லி.,யின் குளிர்கால கூட்டத்தொடர் கால வரையறையின்றி ஒத்திவைக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. இதற்கிடையில், நேற்று நிருபர்களை சந்தித்த அமைச்சர்கள் நாராயணசாமியும், ஷிண்டேயும், பார்லி., நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்ந்து நீடித்து வரும் முட்டுக்கட்டைக்கு வரும் திங்கட்கிழமைக்குள் ஒரு முடிவு தெரிந்து விடும், என்று தெரிவித்தனர்.

பிரணாப் கருத்து: விழா ஒன்றில் பங்கேற்க வந்த நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், ” பார்லி., செயல்பட எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் விசாரணை நடத்தப்படவில்லை என்றால் தான் ஜே.பி.சி.,யை நான் எதிர்க்கிறேனா, இல்லை அரசு எதிர்க்கிறதா என்று பார்க்க வேண்டும். “சிஏஜி’ அறிக்கையை முதலில் “பிஏசி’ ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும். அதன்பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி பார்க்கலாம்’ என்றார். டில்லியில் மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரணாப், ” “2ஜி’ ஸ்பெக்ட்ரம் மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைத்திருந்தால், அதை சமூக வளர்ச்சிக்கு அரசு செலவழித்திருக்கும்’ என்றார். ஆனால், நேற்று மற்றொரு திருப்பமாக சுப்ரீம் கோர்ட்டில் பிரதமர் சார்பில்மனு தாக்கல் செய்யும் பொறுப்பைஅரசு தலைமை வக்கீல் வாகன்வதி மேற்கொள்கிறார்.

ஞாயிறு வழி பிறக்கும்: முடங்கிப்போன பார்லிமென்டை செயல்பட செய்வதற்காக, காங்., உயர்மட்ட கமிட்டி கூட்டம் நாளை கூடுகிறது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்பது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் “கோர்’ கமிட்டி மீண்டும் இரண்டாவது முறையாக வரும் ஞாயிற்றுக்கிழமை கூடுகிறது. கடந்த ஞாயிறு இந்த கமிட்டி கூடிய போதுதான், ராஜாவை ராஜினாமா செய்ய முடிவு எடுக்கப்பட்டது. தற்போது, பார்லிமென்ட் முற்றிலும் முடங்கிப்போய் இருப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவு செய்வதற்காக இக்கூட்டம் நடக்கிறது. பார்லிமென்டை நிரந்தரமாக ஒத்திவைக்கலாமா என்பது பற்றியும் ஆலோசிக்கும் என தெரிகிறது. இருப்பினும் நாளை இரவோ, அல்லது திங்கட்கிழமை காலையோ முடிவு தெரியவரும் என்ற பேச்சும் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *