10 ஆண்டுகளாக கோர்ட் படி ஏறும் ஜெ., வுக்கு என்னைபற்றி பேச அருகதை இல்லை : ராசா பேட்டி

posted in: அரசியல் | 0

புதுடில்லி: பல்வேறு ஊழல் புகாரில் சிக்கிய அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெ.,வுக்கு என்னைப்பற்றி பேச அருகதை இல்லை என மத்திய டெலிகம் துறை அமைச்சர் ராசா தெரிவித்துள்ளார்.

ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான பிரச்னையை எதிர்கட்சியினர் கையிலெடுத்து மத்திய அமைச்ர் ராசாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

பார்லி., 3 நாட்களுக்கும் மேலாக முடங்கியது. ராசாவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். கூட்டணி உடைந்து ஆட்சி இழக்கும் என்ற பயம் வேண்டாம். இந்த நேரத்தில் காங்., ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவும் தயாராக இருக்கிறோம் என்று நேற்று பரபரப்பான பேட்டி அளித்தார். இதற்கு பதில் அளித்த காங்., மேலிடம் தமிழகத்தில் தற்போது கூட்டணியில் இடம் காலி இல்லை. தி.மு.க.,தான் எங்களுடைய கூட்டணி நண்பர் என அறிவித்து ஜெ., அழைப்பை நிராகரித்தது.

சட்டத்தின்படிதான் நான் பின்பற்றினேன்: இதற்கிடையில் இன்று டில்லியில் அமைச்சர் ராசாவை சூழ்ந்து கொண்டு நிருபர்கள் கேள்விக்கணைகளை தொடுத்தனர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராசா தணிக்கை குழு அறிக்கை விவரம் அறியாமல் யாரும் பேசுவது சரியல்ல. 1999 ம்ஆண்டு டெலிகாம் சட்டப்படி மத்திய அமைச்சரவை மற்றும் பார்லி., குழு எடுத்த முடிவின்படியே இந்த ஒப்பந்தம் நிறைவேறியது. சட்டத்தின்படிதான் நான் பின்பற்றினேன். இதில் என்மீத எவ்வித ஊழல் கறையும் இல்லை. இதனால் நான் பதவி விலக தேவையில்லை. இதற்கான முழு விசாரணைக்கும் நான் தயார்.

தான் போட்ட கையெழுத்தையே மறுத்தவர் ஜெ., : காங்கிரசுக்கு ஜெ., விடுத்த அழைப்பு குறித்து நிருபர்கள் கேட்டபோது, ராசா கூறுகையில்; அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெ.,வுக்கு என்னை பற்றி பேச அருகதை இல்லை. ஏற்கனவே பல்வேறு ஊழல் புகாரில் சிக்கி கோர்ட் படி ஏறி வருபவர். எனக்கு தெரிந்து கடந்த 10 ஆண்டு காலமாக கோர்ட்டுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்.

அவர் தனது பாவத்தை மறைக்க இப்படி அடுத்தவர் மீது புகார் கூறி முயற்சிக்கிறார். ஒரு விவகாரம் தொடர்பாக ஜெ., போட்ட அவரது கையெழுத்தையே தான் போடவில்லை என அபாண்டமாக பொய் சொன்னவர். இந்தியாவிலே‌‌யே இந்த அரசியல்வாதியாகத்தான் இருக்க முடியும். இவ்வாறு ராசா கூறினார்.

பிரதமர் வெளிநாடு பயணம் மேற்கொண்டிருப்பதால் இதில் இப்போது முடிவு ஏற்படாது என தெரிகிறது. பிரதமர் நாடு திரும்பிய பின்னர்தான் முடிவுகள் எடுக்கப்படும் என காங்., வட்டாரம் தெரிவிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *