பொள்ளாச்சி : “”தமிழகத்தில் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை தான் ஹீரோவாக இருக்கும் ” என, பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சர்க்கஸ் மைதானத்தில் நேற்று மாலை தி.மு.க., அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க., அரசு கட்சி பாகுபாடின்றி அனைவரையும் சமமக்களாக நினைத்து திட்டங்களை செயல்படுத்துகிறது. நேற்று பெய்த மழையில் முளைத்த கட்சிகள், மக்களை ஏமாற்றும் வகையில் வாக்குறுதிகளை அள்ளி விடுகின்றன. நான் யாரையும் அடையாளம் காட்டி பேசவில்லை. அப்படி பேசுபவர்கள் இன்று, அகதிகளாக; அனாதைகளாக அலைகின்றனர். ஆனால், முதல்வர் கருணாநிதி தேர்தல் நேரத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் 100 சதவீதம் நிறைவேற்றி வருகிறார். சொல்வதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்றில்லாமல், சொல்லாததையும் செய்து வருகிறார். கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க., தேர்தல் அறிக்கை தான் ஹீரோ என்று, தற்போது உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசினார். இதே போல், வரும் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் தி.மு.க., தேர்தல் அறிக்கை தான் ஹீரோவாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
தமிழகத்திலுள்ள 21 லட்சம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் இந்தாண்டு துவங்கப்பட்டுள்ளது. கிராம பகுதிகளில் செயல்படுத்தும் இந்த திட்டத்தை பேரூராட்சி பகுதிகளிலும் செயல்படுத்தி குடிசை வீடுகளே இல்லாத நிலையை ஏற்படுத்த அரசு வீடுவழங்கும் திட்டத்தை முதல்வர் விரிவுபடுத்தியுள்ளார். வீடுகட்டும் பணிகள் நிதி வசதி இல்லாமல் தடைபடவில்லை, இயற்கை ஒத்துழைக்காததால் சில மாவட்டங்களில் தடைபட்டுள்ளது. டிசம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் மூன்று லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும். தி.மு.க., அரசை எந்த வகையிலும் எதிர்கொள்ள முடியாததால், ஜெயலலிதா பொய்யான பிரச்னைகளை கிளறிவிடுகிறார். இதற்கு முடிவு சொல்லும் வகையில் 2011 சட்டசபை தேர்தல் முடிவு அமையும். இவ்வாறு, துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார். விழாவில், அமைச்சர்கள் பழனிச்சாமி, சாமிநாதன், முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Leave a Reply