புதுடில்லி: “2ஜி’ ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை, சுப்ரீம் கோர்ட் இன்றைக்கு ஒத்தி வைத்தது.
இரண்டாம் தலைமுறை அலைவரிசையான “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, அரசு சார்பற்ற அமைப்பு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, சி.பி.ஐ.,க்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
முறைகேடு புகாரை விசாரிப்பதில், அந்த அமைப்பு மந்தமாக செயல்படுகிறது என்றும் குற்றம் சாட்டினர். இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்ந்த அரசு சார்பற்ற அமைப்பின் சார்பில் ஆஜரான வக்கீல் பிரசாந்த் பூஷன் கூறுகையில், “2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 122 கம்பெனிகளுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டது. இவற்றில் 85 கம்பெனிகள் தகுதியில்லாதவை. ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் எல்லாம் மீறப்பட்டுள்ளன. 2001ம் ஆண்டு கட்டணத்திற்கே “2ஜி’ ஸ்பெக்ட்ரமை ஒதுக்கியதால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்றார். இதையடுத்து வழக்கு விசாரணையை இன்றைக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
Leave a Reply