சென்னை : நேரடியாக தேர்வு செய்யப்பட்ட, “79ம் ஆண்டு பிரிவு’ சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு கூடுதல் எஸ்.பி.,யாக பதவி உயர்வு அளிக்க சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
போலீஸ் துறையில் பணியாற்றும் டி.எஸ்.பி.,க்கள் 42 பேர் தாக்கல் செய்த மனு: நாங்கள் அனைவரும் எஸ்.ஐ.,க்களாக 1979ம் ஆண்டு நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டோம். போலீஸ் பயிற்சி கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டது. இக்கல்லூரியில் வழங்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில், நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் எஸ்.ஐ.,க்களுக்கு சீனியாரிட்டி நிர்ணயிக்க வேண்டும். 1965ம் ஆண்டு இதற்கான விதி கொண்டு வரப்பட்டது. இந்த விதியில், 1985ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. 1976 மற்றும் 1979ம் ஆண்டுகளில் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.ஐ.,க்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., வழங்கும் ரேங்கிங் அடிப்படையில் சீனியாரிட்டி நிர்ணயிக்கப்பட வேண்டும் என திருத்தப்பட்ட விதியில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, எங்களுக்கு சீனியாரிட்டியில் மாற்றம் செய்யப்பட்டது. திருத்தப்பட்ட விதியை எதிர்த்து, இரண்டு எஸ்.ஐ.,க்கள் மனு தாக்கல் செய்தனர். திருத்திய விதிகளைப் பொறுத்தவரை, முன்தேதியிட்டு அமல்படுத்துவது செல்லாது என ஐகோர்ட் உத்தரவிட்டது. எனவே, எங்களைப் போன்று ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இந்த திருத்திய விதி பொருந்தது.
ஐகோர்ட் உத்தரவுப்படி, பழைய சீனியாரிட்டி எங்களுக்கு நிர்ணயிக்கப்பட வேண்டும். போலீஸ் பயிற்சி கல்லூரியில் வழங்கப்பட்ட ரேங்கிங் அடிப்படையில் சீனியாரிட்டி நிர்ணயிக்கப்பட வேண்டும். தற்போது, டி.என்.பி.எஸ்.சி., நிர்ணயித்த சீனியாரிட்டி அடிப்படையில் கூடுதல் எஸ்.பி.,க்களாக பதவி உயர்வு அளிக்க, 1979ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரங்களை அரசு கோரியுள்ளது. கடந்த 1979ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.ஐ.,க்கள் பெரும்பாலோருக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் தான் பணிக்காலம் உள்ளது. 250க்கும் மேற்பட்டோர் “1979 பேட்ச்சில்’ உள்ளனர். டி.என்.பி.எஸ்.சி., அளித்த ரேங்கிங் அடிப்படையில் 1979ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.ஐ.,க்களுக்கு கூடுதல் எஸ்.பி.,க்களாக பதவி உயர்வு வழங்க தடை விதிக்க வேண்டும். போலீஸ் பயிற்சி கல்லூரி அளித்த ரேங்கிங் அடிப்படையில் எங்களுக்கு சீனியாரிட்டி நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை நீதிபதி சுதாகர் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் சீனியர் வக்கீல் விஜய்நாராயண், வக்கீல் கே.முத்துராமலிங்கம் ஆஜராகினர். 1979 ல் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.ஐ.,க்களுக்கு பதவி உயர்வு வழங்க அரசுக்கு இரண்டு வாரங்களுக்கு தடை விதித்து நீதிபதி சுதாகர் உத்தரவிட்டார்.
Leave a Reply