பீஜிங் : சீனாவில் மிகப்புகழ் பெற்ற வலைப்பூ (பிளாக்) எழுத்தாளரான ஹான் ஹான் (28) என்பவரின் இலக்கியப் பத்திரிகை, அரசின் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல், இழுத்து மூடப்பட்டது.
சீனாவில், பிரபல கார் பந்தய வீரர், வலைப்பூ எழுத்தாளர், சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், பாடகர் என பல்வேறு திறமைகள் கொண்ட ஹான் ஹான், அரசுடன் மேற்கொண்ட ஓராண்டு போராட்டத்துக்குப் பின், கடந்த ஜூலை 6 ல், இலக்கியத்துக்காக, “பார்ட்டி’ என்ற மாதம் இருமுறை வெளியாகும் இதழை துவங்கினார்.முதல் மாதத்திலேயே இந்த இதழ், எட்டு லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்தது. சீனாவில் மிக அதிகமாக விற்பனையாகும் பொருட்களைப் பட்டியலிடும் இணையதளமான “அமேசான்.காமில்’ இந்த இதழ் முதலிடத்தைப் பெற்றது.
சீனாவில் துவங்கப்பட்ட முதல் தனியார் பத்திரிகை என்ற பெருமை இதற்கு கிடைத்தது. அரசு குறித்தும், கட்சித் தலைவர்கள் குறித்தும் அப்பத்திரிகையில் கிண்டலாகவும், ஏளனமாகவும் ஹான் ஹான் எழுதி வந்தார். இதனால் நாட்டின் அனைவரது கவனமும் அவர் மீது குவிந்தது.இந்நிலையில், இதழின் ஒவ்வொரு பக்கத்திலும் இடம் பெற வேண்டிய செய்திகள் குறித்து, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் பார்வையிட்ட பின்பே, இதழ் அச்சுக்கு செல்ல வேண்டிய நெருக்கடி உருவாக்கப்பட்டது.
இதுகுறித்து சீனாவில் இருந்து வெளியாகும் அரசுப் பத்திரிகையான “க்ளோபல் டைம்ஸ்’ கூறியிருப்பதாவது:அந்த இதழ், சர்வதேச தர வரிசை எண்ணைப் பெறுவதற்குப் பதிலாக, சர்வதேச புத்தக தர எண்ணைப் பெற்றிருக்கிறது. அதனால், சட்டப்படி அது ஒரு புத்தகமாக கருதப்படுகிறது. அதனால் அரசின் பல்வேறு பரிசோதனைகளுக்கு அந்த இதழ் உட்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.இவ்வாறு க்ளோபல் டைம்ஸ் கூறியுள்ளது.
சீன மொழியில் வெளிவரும் அரசின் “ஷின்ஹூவா’ பத்திரிகை, “அவர் மீண்டும் கார் பந்தயத்திற்கே திரும்பலாம்’ என்று கிண்டலடித்துள்ளது.
Leave a Reply