வாஷிங்டன் : அல்-குவைதா இயக்கத்தை சேர்ந்த சிலர், பாகிஸ்தானின் எல்லை பகுதிகளில் பதுங்கியிருப்பதாக அப்போதைய பாக்., அதிபர் முஷாரப் ஒத்து கொண்டார் என்பது, “விக்கி லீக்ஸ்’ ஆவணங்கள் மூலம் வெளிவந்துள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திற்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருப்பது தான், பழங்குடிப் பகுதிகள். பஜாவுர், முகமது, கைபர், ஒராக்சய், குர்ரம், வடக்கு வாசிரிஸ்தான், தெற்கு வாசிரிஸ்தான் என, மொத்தம் ஏழு பழங்குடிப் பகுதிகள் இதில் அடங்கியுள்ளன. இவை அனைத்தும் “கூட்டு நிர்வாக பழங்குடிப் பகுதிகள்’ (எப்.ஏ.டி.ஏ.,) என்றழைக்கப்படுகின்றன. இப்பகுதிகளில் உள்ள பழங்குடியினர், தலிபான்களுக்கு ஆதரவளிக்கின்றனர். இவர்கள் தான் தலிபான்கள் ஆப்கனில் இருந்து பாகிஸ்தானுக்கும், அதேபோல் பாகிஸ்தானில் இருந்து ஆப்கனுக்கும் ஊடுருவ உதவி செய்கின்றனர். ஆனால், இன்று வரையிலும் பாகிஸ்தான் அரசு, அல்-குவைதாவினரோ, பின்லேடன் மற்றும் அவரது உதவியாளர் அய்மன் அல் ஜவாகிரி ஆகியோர் பாகிஸ்தானில் இல்லை என திரும்ப திரும்ப சொல்கிறது. இதுகுறித்து, பர்வேஸ் முஷாரப் பாக்., அதிபராக இருந்த போது, அமெரிக்கப் பிரதிநிதிகளிடம் பேசியுள்ளார். அப்போது, பஜாவுர் பகுதியில் அல்-குவைதாவினர் சிலர் இருப்பதாக அவர் ஒத்து கொண்டார்.
அமெரிக்க பிரதிநிதி ஒருவர், நியூயார்க்கில் உள்ள தலைமையகத்திற்கு தெரிவித்த தகவலில் கூறியிருப்பதாவது: பஜாவுர் பகுதியில் அல்-குவைதாவினர் பதுங்கியிருப்பதாக முஷாரப் ஒத்துக் கொண்டார்.
மேலும் அங்கு வாழும் பஸ்துன் பழங்குடியினர் மீது பாக்., அரசு கவனம் செலுத்தி வருகிறது. ஏழு பழங்குடிப் பகுதிகளில், வடக்கு மற்றும் தெற்கு வாசிரிஸ்தான் பழங்குடியினர், தலிபான் ஊடுருவுவதற்கு வெளிப்படையாக உதவி வருகின்றனர். மற்ற பகுதிகள் அமைதியாக இருப்பதாகவும், குர்ரம் பகுதியில் தலிபான் ஊடுருவ முயன்றால் உள்ளூர் வாசிகளே அடித்து துரத்துவதாகவும் முஷாரப் கூறுகிறார். இவ்வாறு அமெரிக்க பிரதிநிதி கூறியுள்ளார். அப்போதைய அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, முஷாரப்பிடம் பேசும் போது, “தலிபான் தலைவர்கள் முல்லா ஒமர் எங்கிருக்கிறார்?’ என்று கேட்ட போது, “அவர்கள் பாகிஸ்தானில் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.
Leave a Reply