ஆங்கிலேய பேரரசு உலகை வளைக்க துவங்கியது முதலே, இவ்வுலகில் ஆங்கிலமொழி ஆதிக்கம் பெற தொடங்கியது.
இரண்டாம் உலக போருக்குப் பிறகு பிரிட்டன் ஓய்ந்தது. ஆனாலும் ஆங்கிலம் பேசும் அமெரிக்கா வல்லரசாக மாறியவுடன் அதே ஆங்கிலம் அறிவிக்கப்படாத உலக பொதுமொழியாக பீடு நடை போடத் துவங்கியது. இதன்மூலம் தனிமனித வாழ்வின் சமூக முன்னேற்றத்துக்கான ஒரு முக்கிய படிக்கல்லாக ஆங்கிலம் மாறிப்போனது.
இத்தகைய ஒரு கால ஓட்டத்தில், இந்தியா போன்ற அதிக மனிதவளம் கொண்ட வளரும் நாட்டில் பிறந்து, கல்வி கற்கும் வாய்ப்பை பெற்ற ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தங்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கு ஆங்கில மொழியில் புலமை பெற வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது. எனவே ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டிராத அனைத்து நாட்டினரும் ஆங்கில மொழி புலமைத் தேர்வுகளை எழுத வேண்டியது அவசியமாகிறது.
ஒரு வெளிநாட்டுப் பல்கலைக் கழகத்தில் சேருவதற்கு நல்ல மதிப்பெண்கள், வலுவான நோக்கம், உறுதியான பரிந்துரை போன்றவை அவசியம். ஆனால் சேர்க்கை கமிட்டியின் கவனத்தை கவர, மேற்கூறிய தேர்வுகளில் சராசரியை விட அதிக மதிப்பெண்கள் எடுத்திருப்பது அதைவிட முக்கியம்.
நீங்கள் இரு வகையான தேர்வுகளை விரிவான முறையில் எழுதுவீர்கள். அதில் ஒன்று உங்கள் திறன் சம்பந்தப்பட்டது, மற்றொன்று உங்கள் மொழியறிவு சம்பந்தப்பட்டது. இந்த இரண்டு தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்கள் பெறுவது வெற்றிக்கு மிகவும் முக்கியம். இந்த மொழியறிவு தேர்வானது ஒருவரின் மொழித்திறனை அளவிடும் பொருட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற தேர்வுகளில் ஒன்றைப் பற்றி இங்கே விரிவாக அலசுவோம்.
ஐ.இ.எல்.டி.எஸ். தேர்வு:
வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இந்த தேர்வு அவசியம். ஏனெனில் வெளிநாடுகளில் இளங்கலை, முதுகலை படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்கள், ஆங்கிலத்தில் நல்ல மொழித்திறன் பெற்றிருந்தால்தான் அந்த கல்வி நிறுவனங்களில் சேர முடியும் என்ற நிலை இருக்கிறது. பொதுவாக இந்திய மாணவர்கள் படிப்பதற்கு செல்ல விரும்பும் நாடுகளாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஜப்பான் போன்றவை திகழ்கின்றன. இந்த நாடுகளின் கல்வி நிறுவனங்கள் இந்த ஆங்கில மொழித்தேர்வு மதிப்பெண்களை முக்கியமாக கருதி அங்கீகரிக்கின்றன.
மாணவர்களைத் தவிர, கல்வி உதவித்தொகை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு, வெளிநாடுகளில் வசித்தல் மற்றும் வேலை விசாக்கள், வெளிநாடுகளிலிருந்து சில மருத்துவ மற்றும் உரிமம்(லைசென்ஸ்) வழங்கல் முகமைகளிடமிருந்து(ஏஜென்சி) தொழில் சார்ந்த சான்றிதழ் பெறுதல் போன்ற காரணங்களுக்கு மட்டுமின்றி, பலருக்கு தங்களின் சொந்த ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ளவும் இந்த ஆங்கில மொழித் தேர்வு அவசியம்.
ஐ.இ.எல்.டி.எஸ். தேர்வு முறை:
இந்த தேர்வை பிரிட்டிஷ் கவுன்சில் வேறு சில சர்வதேச அமைப்புகளுடன் சேர்ந்து நிர்வகிக்கிறது. இந்தத் தேர்வு முறையானது கடந்த 1960 -களிலிருந்து பல வடிவங்கள் மாறி, இன்றைக்கு இருக்கும் நிலையை அடைந்துள்ளது. ஐ.இ.எல்.டி.எஸ். தேர்வுமுறையானது, பேச்சு மொழி கற்றல் மற்றும் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக ஆங்கிலம் கற்றல் ஆகியவற்றுக்காக மிகவும் விரும்பப்படுகிறது. இன்றைக்கு இருக்கும் இந்த ஐ.இ.எல்.டி.எஸ். தேர்வுமுறை கடந்த காலங்களில் பல மாற்றங்களுக்கு உட்பட்ட ஒன்று என்பதை முன்பே கண்டோம்.
அந்த வகையில் கடந்த 1989 -ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு இரண்டு குறிப்பற்ற அளவீடுகள் மற்றும் குறிப்பான அளவீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. குறிப்பற்ற அளவீடுகளில் இடம்பெறும் கவனித்தல் மற்றும் பேசுதல், தேர்வு மாணவரின் பொது ஆங்கில அறிவை சோதித்தது. குறிப்பிட்ட அளவீடுகளில் இடம்பெறும் படித்தல் மற்றும் எழுதுதல், தேர்வு மாணவரின் உடற்கூறு அறிவியல் – தொழில்நுட்பம், வாழ்க்கை – மருத்துவ அறிவியல்கள் மற்றும் வணிகப் படிப்புகள் – சமூக அறிவியல்கள் போன்றவற்றை சோதித்தது.
ஆனால், 1995 -இல் துறை சார்ந்த அளவீடுகள், ஒரு கல்விசார்ந்த படித்தல் மதிப்பீடு மற்றும் ஒரு கல்விசார்ந்த எழுதுதல் மதிப்பீடு போன்றவற்றால் மாற்றப்பட்டது. அதேபோன்று 2001 -இல், ஐ.இ.எல்.டி.எஸ். தேர்வுமுறை -இன் திருத்தியமைக்கப்பட்ட பேசுதல் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் 2005 -இல் எழுத்து தேர்வின் புதிய மதிப்பீட்டு முறை அமலுக்கு வந்தது. அதே ஆண்டில், ஐ.இ.எல்.டி.எஸ். தேர்வுமுறை -இன் கணினி மயமாக்கப்பட்ட வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தேர்வு எழுதுதல்:
தேர்வில், கல்விசார்ந்த மதிப்பீடு மற்றும் பொதுபயிற்சி மதிப்பீடு என்ற இரு முறைகள் உள்ளன. எனவே இவற்றில் நமக்கு பொருந்துவது எது என்பதை தேர்ந்தெடுப்பது முக்கியம். முதல் வகையானது முக்கியமாக வெளிநாடுகளில் கல்வி பயில செல்பவர்களுக்கானது. இரண்டாம் வகை முக்கியமாக வெளிநாடுகளில் (குறிப்பாக ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து) குடியேறுபவர்கள், பணி அனுபவம் மற்றும் பயிற்சியை நாடுபவர்களுக்கானது. தேர்வானது, அந்தந்த நாடுகளை பொருத்து தாளில் எழுதுவதாகவோ அல்லது கணினியில் எழுதுவதாகவோ இருக்கும்.
ஐ.இ.எல்.டி.எஸ். தேர்வுமுறை -இன் இரு வடிவங்களுமே கவனித்தல், படித்தல், எழுதுதல் மற்றும் பேசுதல் என்ற நான்கு பிரிவுகளைக் கொண்டிருக்கும். தேர்வை எழுதுபவர் இந்த நான்கு பிரிவுகளிலும் கலந்துகொள்ள வேண்டும்.
படித்தல் பிரிவு தேர்வானது, எழுதுபவரின் படிக்கும் திறனை (ஒரு நீளமான உரையை, மூன்று பிரிவுகளில் ஒவ்வொன்றிலிருந்தும் படித்து முடித்த பின்னர் அவர் அதிலிருந்து கேட்கப்படும் பலவித கேள்விகளுக்கு எழுத்து மூலமாக பதிலளிப்பதை பொருத்து) மதிப்பிடுகிறது. இந்த நீண்ட உரைகள், கல்வி சம்பந்தமாக, புத்தகங்கள், பத்திரிக்கைகள் மற்றும் செய்தித்தாள்களில் வரும் தொகுப்புகளிலிருந்து எடுக்கப்படுகிறது. இவை சமயங்களில் எழுத்து வடிவம் அல்லாத வரைபடங்களையும் கொண்டிருக்கலாம்.
கவனித்தல் பிரிவு நான்கு துணைப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. முதல் துணைப் பிரிவு, இரு நபர்களிடையே நடைபெறும் சமூகம் சார்ந்த உரையாடலைக் கொண்டது. இரண்டாம் துணைப் பிரிவு, நீண்ட பேச்சு முறையைக் கொண்டது. மூன்றாம் துணைப் பிரிவு, நான்கு நபர்கள் வரை சேர்ந்து கல்வி முறைப்படி உரையாடுதலைக் கொண்டது. நான்காம் துணைப் பிரிவு, கல்வி சம்பந்தமாக ஒரு நீண்ட பேச்சைக் கொண்டது.
பேசுதல் தேர்வானது மூன்று பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில் தேர்வாளருடன் நேருக்கு நேர் அமர்ந்து, அறிமுகத்திற்குப் பின்னர் உங்கள் வீடு, குடும்பம், வேலை, படிப்பு மற்றும் விருப்பங்கள் பற்றி சில கேள்விகள் கேட்பார். இரண்டாம் பகுதியில் மாணவருக்கு குறிப்பிட்ட தலைப்புக் கொடுக்கப்பட்டு, பேசும்படி கேட்கப்படுவார். தயாராவதற்கு ஒரு நிமிடம் அவகாசம் கொடுக்கப்படும், குறிப்புகளும் எடுத்துக் கொள்ளலாம்.
பிறகு ஒன்றிலிருந்து இரண்டு நிமிடங்கள் பேச வேண்டும். முடிவில் சில கேள்விகளுக்கும் பதில் கூற வேண்டும்.
மூன்றாம் பகுதியில், மாணவர் இரண்டாம் பகுதியில் பேசிய தலைப்பிலிருந்து மேலும் கேள்விகள் கேட்கப்படுவார். இப்பகுதி இருவழி கலந்துரையாடல் பகுதி என்றும் அழைக்கப்படும். இந்தக் கேள்விகள் அந்த தலைப்பை பற்றி மேலும் விவாதிக்க உதவும்.
எழுதும் பிரிவு இரண்டு நோக்கங்களைக் கொண்டது. முதல் நோக்கமானது, மாணவருக்கு ஏதாவது தகவல், வரைபடம் கொடுக்கப்பட்டு அதன்மூலம் அவருக்குப் புரிந்த விளக்கத்தை தனது சொந்த வரிகளில் எழுதுவதாகும். இரண்டாம் நோக்கமானது, விவாதம் அல்லது சிக்கலின் அடிப்படையில் மாணவர் ஒரு கட்டுரை எழுதும்படி கேட்கப்படுவார். இந்த இரு எழுத்து தேர்வுகளும் முறையான நடையில் இருக்க வேண்டும்.
தேர்வு மற்றும் தேர்வு மதிப்பெண்களை கணக்கிடுதல்:
ஐ.இ.எல்.டி.எஸ். தேர்வுமுறையானது தேர்வு மதிப்பெண்களை அறிவிக்க மற்றும் அளவிட, தனித்துவமான ஒன்பது-புள்ளி மதிப்பிடும் முறையைப் பயன்படுத்துகிறது. நீங்கள் ஒவ்வொரு பிரிவிலும் பெறும் மதிப்பெண்கள் சமமாக மதிப்பிடப்பட்டு, அதனடிப்படையில் இணைவு முறையில் மொத்த மதிப்பெண்கள் வழங்கப்படும்.
இந்த தேர்வு நம்பகமான, நியாயமான முறையிலும், பாரபட்சமற்ற முறையிலும் நடத்தப்படுவது இதன் சிறப்பம்சமாகும்.
ஏனெனில் இந்த தேர்வுக்கான உபகரணங்களை தயாரிப்பதிலும், நடத்தப்படும் ஆய்விலும் எழுத்தாளர்களின் சர்வதேச குழுக்கள் ஈடுபட்டுள்ளன. ஆங்கிலம் பேசும் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த மேற்கூறிய நிபுணர்கள், ஐ.இ.எல்.டி.எஸ். தேர்வுமுறை -இன் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதோடு, அந்தந்த நாடுகளின் நிஜ வாழ்க்கை சூழலையும் சேர்க்கிறார்கள்.
கேள்வித்தாள் முறைகள்:
படித்தல் தேர்வு
40 கேள்விகள், 3 பிரிவுகள் (2150 – 2750 வார்த்தைகள்)
ஒவ்வொரு பிரிவிலும் கல்வி அல்லது பொது தலைப்பை
பற்றி ஒரு நீண்ட பத்தி இருக்கும். 60 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.
மதிப்பீட்டு அம்சங்கள்
படித்து சாராம்சத்தை புரிந்து
கொள்ளும் திறன், அனுமானம்,
அர்த்தம் புரிந்துகொள்ளும்
திறன் அறிதல், விவாத திறனை மேம்படுத்தல்
கவனித்தல் தேர்வு
40 கேள்விகள், 4 பிரிவுகள், 30 நிமிடங்கள்,
கூடுதலாக, (மாற்றுதலுக்காக 10 நிமிடங்கள் தரப்படும்)
மதிப்பீட்டு அம்சங்கள்
உண்மையான தகவல் மற்றும்
முக்கிய எண்ணங்களை புரிந்து
கொள்ளும் திறன், தகவல்களை ஒருங்கிணைக்கும்
திறன் அறிதல், பேசுபவரின் நோக்கம், பண்பை அறிதல்.
பேசுதல் தேர்வு
3 பகுதிகள்: அறிமுகம் மற்றும் நேர்காணல்,
(4-5 நிமிடங்கள்), தலைப்பில் பேசுதல்(3-4 நிமிடங்கள்)
இரட்டைவழி கலந்துரையாடல்(4-5 நிமிடங்கள்)
மொத்தம் 11-14 நிமிடங்கள்
மதிப்பீட்டு அம்சங்கள்
விரிவாக பேசும் திறனை மதிப்பிடல், பல சூழல்களில் பல
விஷயங்களை விவாதிக்கும்
திறனை மதிப்பிடல்.
எழுதுதல் தேர்வு
முதல் பகுதியில் குறைந்தபட்சம்
150 வார்த்தைகளும், இரண்டாம் பகுதியில்
குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும் எழுதுதல்.
60 நிமிடங்கள்
மதிப்பீட்டு அம்சங்கள்
தரவுகளை அமைத்தல், வழங்குதல்,
ஒப்பிடுதல் திறன், செயல்பாட்டு நிலைகளை
விவரிக்கும் திறன், சம்பவங்களை
விவரிக்கும் திறன், எண்ணங்களை
வெளிப்படுத்தும் திறன் அறிதல்
Leave a Reply