இந்தியாவுக்கு ஆயுத சப்ளை : அமெரிக்க கம்பெனிகள் போட்டி

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : இந்தியாவுக்கு ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை சப்ளை செய்ய அமெரிக்க கம்பெனிகள் போட்டி போடுகின்றன.

கடந்த ஆண்டு அமெரிக்க கம்பெனிகள் இந்தியாவுக்கு ஆயுதங்கள் விற்க ஆர்வம் காட்டின. ஆனால், மத்திய அரசு ஐரோப்பிய நிறுவனங்களிடம் ஆயுதங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டது. ஒபாமா வருகைக்கு பிறகு அமெரிக்க நிறுவனங்களிடம் ஆயுதங்கள் வாங்க இந்தியா தயாராக இருப்பதால், கணிசமான ஆயுதங்களை இந்தியாவுக்கு சப்ளை செய்ய ஆயுத நிறுவனங்கள் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனிடம் ஒப்புதலை பெற்றுள்ளன. அமெரிக்க பார்லிமென்ட்டும் இதற்கு இசைவு தெரிவித்துள்ளது. இதையடுத்து 6 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்களை சப்ளை செய்ய பென்டகன் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து ஆயுதம் தாங்கிய ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை இந்தியாவுக்கு சப்ளை செய்ய அமெரிக்க நிறுவனங்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க “பெல் ஹெலிகாப்டர்’ நிறுவனம் கோப்ரா ரக ஹெலிகாப்டர்களை சப்ளை செய்ய முன்வந்துள்ளது.ரஷ்யாவிடம் வாங்கிய ஹெலிகாப்டர்கள் பழையதாகி விட்டதால், ஆப்கன்,ஈராக் போரில் வெற்றிகரமாக இயக்கப்பட்ட அமெரிக்க ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியாவும் ஆர்வமாக உள்ளது. எனவே, முதல் கட்டமாக ஆயுதம் தாங்கிய 22 ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு விற்கப்படலாம், என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு ஆயுத விமானங்கள் விற்பதில் போயிங், யூரோகாப்டர், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் முனைப்பாக உள்ளன. விமானம் மற்றும் கப்பலில் இருந்து ஏவப்படும், ஹார்பூன்பிளாக்-2 ரக ஏவுகணைகள் ஏற்கனவே இந்தியாவுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகளை மேலும் சப்ளை செய்ய அமெரிக்க கம்பெனிகள் முன்வந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *