டர்பன்; “”தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜாகிர் கான் இடம் பெறுவதால், இந்திய அணியின் பவுலிங் எழுச்சி பெறும்,” என, பயிற்சியாளர் கிறிஸ்டன் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் தோல்வியடைந்த இந்திய அணி, 0-1 என பின் தங்கி உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி, நாளை டர்பனில் துவங்குகிறது.
இத்தொடரில் இந்திய அணியின் பந்து வீச்சு மோசமாக இருப்பதாக, தென் ஆப்ரிக்க வீரர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து இந்திய பயிற்சியாளர் கிறிஸ்டன் கூறியது:
முதல் டெஸ்டிற்கு நாங்கள் சிறப்பாக தயாராகி இருந்தோம். ஆனால் முதல் நாளில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருந்தது. இருந்தாலும் சூழ்நிலையை உணர்ந்து பேட்ஸ்மேன்கள் சற்று பொறுப்பாக விளையாடி இருக்கலாம். இந்த டெஸ்டில் நாங்கள் 100 ரன்கள் பின்தங்கி இருந்தது தான் தோல்விக்கு காரணம்.
பொறுத்திருந்து பார்ப்போம்:
முதல் டெஸ்ட் போல, டர்பன் ஆடுகளமும் பவுலர்களுக்கு உதவும் எனத் தெரிகிறது. ஏனெனில் மைதானத்தின் “அவுட் பீல்டு’ எப்படி உள்ளதோ, அதுபோலத்தான் ஆடுகளமும் உள்ளது. இருப்பினும் முதல் இரண்டு நாட்கள் எப்படி போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த போட்டிக்காக, சிறப்பான முறையில் வீரர்கள் தயாராகி உள்ளனர். இது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. தங்களால் இயன்ற வரையில் அர்ப்பணிப்பு உணர்வுடன், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கின்றார்கள்.
அதிக ஸ்கோர்:
இந்த டெஸ்டில் இந்தியாவின் “டாப்-6′ பேட்ஸ்மேன்களில் யாராவது ஒருவர் சதம் அல்லது சிறப்பான ஸ்கோர் எடுக்கும் பட்சத்தில் அணி, 400க்கும் அதிகமான ரன்களை எட்டும். ஏனெனில் டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை முதல் இன்னிங்சில் 400க்கும் மேல் எடுப்பது முக்கியம். ஒருவேளை அப்படி எடுக்கவில்லை என்றால் நெருக்கடி ஏற்படும் என்பதும் எங்களுக்குத் தெரியும்.
திறமை உள்ளது:
பொதுவாக டெஸ்ட் போட்டிகளில் அணியின் வெற்றிக்கு, எதிரணியின் 20 விக்கெட்டுகள் தேவை. கடந்த மூன்று ஆண்டுகளில், உலகின் பல்வேறு களங்களில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளோம். இதற்கான திறமை எங்களிடம் உள்ளது. இதனை மீண்டும் நிரூபித்து காட்டுவோம். தவிர, இந்த டெஸ்டில் ஜாகிர் கான் இடம் பெற இருப்பது வரவேற்கத்தக்கது.
ஆறாவதாக களமிறங்கும் ரெய்னா, கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை என்பது உண்மை தான். இவர் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
இவ்வாறு கிறிஸ்டன் கூறினார்.
வெறும் வதந்தி
உலக கோப்பை (2011) தொடருக்குப் பின் தென் ஆப்ரிக்க அணிக்கு பயிற்சியாளராக கிறிஸ்டன் செல்ல இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து தென் ஆப்ரிக்க அணியின் தலைமை அதிகாரி ஜெரால்டு மஜோலா கூறுகையில்,”” அணியை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லத் தகுந்த பயிற்சியாளரை தேடி வருகிறோம். இதற்கு கிறிஸ்டன் விண்ணப்பித்துள்ளார் என்ற செய்தி உண்மையல்ல. இது வதந்தி தான்,” என்றார்.
Leave a Reply