இலங்கையின் தேசியக்கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே இசைக்க உத்தரவு : இனவாதத்தை தூண்டும் ஜனாதிபதி

posted in: உலகம் | 0

இலங்கையின் தேசியக்கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே பாடப்படும் என இலங்கையின் அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது

இதன்படி தற்போது தமிழிலும் பாடப்படும் தேசிய கீதம் எதிர்காலத்தில் தேசிய நிகழ்வுகளின் போது பாடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தேசியக்கீதத்தில் வரும் மாதா என்ற சொல் வடக்கு – கிழக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் உரித்தான சொல் என்பதை கருத்திற் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் செய்திதாள் தெரிவித்துள்ளது.

லண்டனுக்கு சென்று திரும்பிய நிலையில் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வேறு எந்த நாட்டிலும் தேசியக்கீதம் ஒரு மொழிக்கு அதிகமான மொழிகளில் பாடப்படுவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, தமது ஆட்சிக்காலத்தின் போது வடக்கில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது தமிழில் தேசியக்கீதம் பாடப்பட்ட போது வெளிநடப்பு செய்ததையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் இலங்கை ஒரேநாடு என்ற அடிப்படையில் தேசியக்கீதம் இசைக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த கருத்துக்கு அமைச்சர் விமல் வீரவன்ச தமது ஆதரவை வெளியிட்டார்.

எனினும் அமைச்சர் வாசுதேச நாணயக்கார மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் இது நடைமுறைக்கு சாத்தியமற்றது எனக் குறிப்பிட்டனர்.

எனினும் அமைச்சரவை ஜனாதிபதியின் யோசனையை ஏற்றுக் கொண்டது.

இந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்ட போது இலங்கையின் அமைச்சரவையில் உள்ள டக்ளஸ் தேவானாந்தா, ஆறுமுகன் தொண்டமான், ரவூப் ஹக்கீம், ஏ.எல்.எம் அத்தாவுல்லா உட்பட்டவர்கள் தமது பதவிகளை காப்பாற்றிக்கொள்வதற்காக மௌனிகளாகவே இருந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *