ஆந்திராவில் கடந்த மாதம் பெய்த பலத்த மழைக்கு பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங் களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேத மடைந்தன. கடும் இழப்பை சந்தித்த விவசாயிகளுக்கு உடனடியாக உரிய நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தின.
இதை ஆளும் காங்கிரஸ் முதல்-அமைச்சர் கிரண்குமார் ரெட்டி ஏற்க வில்லை.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க கோரி கடந்த 17-ந் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார். 8-வது நாளாக அவரது உண்ணா விரதம் இன்று நீடித்தது. அவரது உடல்நிலை மோசம் அடைந்துள்ளது.
இந்த நிலையில் விவசாயிகளுக்கு உடனடியாக உரிய இழப்பீட்டை கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான ஜெகன்மோகன் ரெட்டியும் நேற்று முன்தினம் 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
விஜயவாடா அருகில் உள்ள பிரகாசம் அணைப்பகுதியில் அவர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். இதில் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
ஜெகன்மோகன் ரெட்டியின் உண்ணாவிரதப் போராட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர். இது காங்கிரஸ் மேலிட தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டியின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று (வியாழன்) அவரது உண்ணாவிரதம் முடிந்தது. இதில் மேலும் 20 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர்கள், ஜெகன் மோகனின் உண்ணாவிரதத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்வதை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.
முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டியின் சொந்த மாவட்டமான சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரே சிறுபான்மை இன எம்.எல்.ஏ. யான ஷேக் ஷாஜகானை தடுத்து நிறுத்த முதல்வரின் ஆட்கள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஆனால் ஷேக் ஷாஜகான், விஜயவாடா சென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டார். இதனால் காங்கிரஸ் மேலிட தலைவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
கடப்பா மாவட்டத்தை சேர்ந்த கமலம்மா, அமர்நாத் ரெட்டி, கே.ஸ்ரீனிவாசலு ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களும் தங்கள் ஆதரவாளர்களுடன் வந்திருந்தனர். பிரஜா ராஜ்ஜியம் கட்சியை சேர்ந்த பூமா சோபா நாகி ரெட்டி, கட்சனிராமி ரெட்டி ஆகி யோரும் ஜெகன் மோகனின் உண்ணாவிரதப் பந்தலில் இருந்தனர்.
நடிகையும், எம்.பி.யுமான ஜெயப்பிரதா ஜெகன் மோகனுடன் போனில் தொடர்பு கொண்டு உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். உண்ணாவிரத கோரிக்கை வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். அவர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்க உள்ள புதிய கட்சியில் இணைவார் என்று தெரிகிறது.
நடிகை ரோஜாவும், ஜெகன் மோகனுக்கு ஆதரவாக உள்ளார். இந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டியை ஆதரிக்கும் காங்கிரஸ் தலைவர்கள் நிர்வாகிகள் எண்ணிக்கை இன்று அதிகரித்தது. மசூலிப்பட்டினம் எம்.எல்.ஏ. நனி முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி கேட்டுக் கொண்ட பிறகும் இன்று காலை ஜெகனுடன் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
ஜெகன்மோகன் ரெட்டி உண்ணாவிரதம் இருக்கும் இடத்தில் லட்சக்கணக்கான வர்கள் திரண்டுள்ளனர். இன்று காலை அந்த இடத்தில் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதனால் கிருஷ்ணா நதிக்கரை யோரம் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது.
ஆந்திர முன்னாள் முதல்- மந்திரி ஜனார்த்தன ரெட்டியின் சகோதரர் பத்மநாப ரெட்டி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இதனால் எரிச்சல் அடைந்துள்ள முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி, ஜெகன்மோகன் உண்ணாவிரத கூட்டத்துக்கு சென்ற காங்கிரசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
இதற்கு ஜெகன்மோகனின் ஆதரவாளரான பிரகாஷ்ராவ் கூறுகையில், தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுத்துப் பார் என்று சவால் விட்டுள்ளார்.
ஜெகன்மோகனுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிப்படையாக ஆதரவு கொடுத்திருப்பது ஆந்திர மாநில அரசியலில் மீண்டும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. கிரண்குமார் ரெட்டியின் ஆட்சிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 31 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க் கள் ஜெகன்மோகனுக்கு ஆதரவாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவாளர் ராம்பாபு கூறியதாவது:-
ஜெகன்மோகன் ரெட்டியை மேலும் 20 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரிக்கின்றனர். அவர்களையும் சேர்த்தால் ஜெகனுக்கு 51 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. இதை வைத்து நாங்கள் ஆந்திர அரசை கவிழ்க்க மாட்டோம்.
விவசாயிகள் பிரச்சினையை தீர்க்கா விட்டால் ஜெகன்மோகன் ரெட்டி அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிப்பார்”.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜெகன்மோகன் ரெட்டி அணிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் ஆந்திர அரசு எந்த நேரத்திலும் கவிழும் அபாயம் உள்ளது. ஆந்திராவில் ஆட்சி கவிழாமல் தடுக்க மேலிட தலைவர்களுடன் முதல்- மந்திரி கிரண்குமார் ரெட்டி மற்றும் மாநில மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
இதனால் ஆந்திர அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
Leave a Reply