சென்னை : “”ஊழலால் நாட்டுக்கு பெரும் தலைக்குனிவு,” என, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி சென்னையில் தெரிவித்தார்.
சென்னை மயிலாப்பூரில், முன்னாள் எம்.பி., இரா. செழியன் எழுதிய,”ஷா கமிஷன் அறிக்கையில் தொலைந்ததும், கிடைத்ததும்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது:நான், இதுவரை பல புத்தகங்களை வெளியிட்டுள்ளேன். அதில், இந்த புத்தகம் உண்மை, தனித்துவம் வாய்ந்தது. மத்திய அரசு வெளியிட்ட,”ஷா கமிஷன்’ அறிக்கைக்கு உப தலைப்பிட்டு, மறு புத்தகமாக இரா. செழியன் வெளியிட்டுள்ளார்.கடந்த 1975 -77ம் ஆண்டு வரை, எமர்ஜென்சி காலத்தில் நடந்த எண்ணற்ற சம்பவங்களை பலர் மறந்து விட்டனர். இந்த வரலாற்று நிகழ்வுகளை மீண்டும் உருவாக்கம் செய்து, வெளிக்கொண்டு வந்துள்ளார். உலகளவில், இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடாக இருப்பதால், இதை வெளிக் கொண்டு வந்ததன் மூலம், ஜனநாயகம், வரலாறு மற்றும் நாட்டிற்கு சேவை செய்துள்ளார்.கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், இந்தியா மீது உலக நாடுகளுக்கு மரியாதை இல்லை. இந்த 21ம் நூற்றாண்டில், இந்தியா மற்றும் சீனா மீது உலக நாடுகளின் பார்வை விழுந்துள்ளது. மிகப்பெரிய ஜனநாயக நாடாக இருப்பதால், சீனாவை விட இந்தியா கூடுதல் சிறப்பு பெற்றிருக்கிறது.
நெருக்கடி காலத்தில் அரசுக்கு எதிராக, மக்கள் ஒன்று திரண்டு கோபத்தை வெளிப்படுத்தினர். அதே நிலை இன்றும் உருவாகி உள்ளது. நெருக்கடி நிலையைக் கொண்டு வந்ததால் தான், காங்., மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. ஊழல் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றால் மக்கள் கொந்தளித்துப் போய் இருக்கின்றனர். கடந்த 77ம் ஆண்டு மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூ., கட்சிகள், ஜனதாவிற்கு எதிர்காலம் இருக்காது என்பதால் எங்களுடன் வந்துவிடுங்கள் எனக் கூறினர். அதை நான் மறுத்தேன். ஆனால், தற்போது அந்த கட்சிகளின் நிலைமை கேள்விக் குறியாக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சிக்குப் பின் நிருபர்களிடம் அத்வானி கூறியதாவது: கடந்த சில மாதங்களாக, நாட்டில் உள்ள அரசியல் சாசன அமைப்புகளும், ஊடகங்களும் குறிப்பிட்ட பிரச்னையை முன்னிலைப்படுத்தி வருகின்றன. சுப்ரீம் கோர்ட், பார்லிமென்ட் மற்றும் ஊடகங்கள் என, அனைத்திலும் இவை தான் முக்கிய இடம் பெற்றன. காமன்வெல்த் போட்டி, ஆதர்ஷ் குடியிருப்பு மற்றும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஆகியவற்றில் நடந்த ஊழல்கள் பற்றி, கடந்த பார்லிமென்ட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்பின. ஊழல் பிரச்னை மிகப்பெரிய நோயாக உருவெடுத்துள்ளது. இது நாட்டிற்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.இந்த மிகப்பெரிய நோயை தெளிவான சிந்தனை கொண்டவர்கள் ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டும். நாட்டின் ஊழலை எதிர்த்து, தீவிர பிரசாரத்தில் பா.ஜ., ஈடுபடவுள்ளது. விலைவாசி உயர்வால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வை அரசியல் முறையில் பயன்பெறும் வகையில் எதிர்க்க வேண்டும்; இல்லையென்றால் நாட்டின் அமைதி நிலை சீர்குலைந்துவிடும்.இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், ராஜாஜி பொது நல மைய அறங்காவலர் பி.எஸ்., ராகவன், தலைவர் நாராயணசாமி, “துக்ளக்’ ஆசிரியர் சோ, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கள் கோபால சாமி, கிருஷ்ணமூர்த்தி, தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் இல.கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Leave a Reply