ஊழலுக்கு எதிராக போர் தொடுங்கள் ஆவேசம்: டில்லி காங்.,மாநாட்டில் சோனியா கோபம்

posted in: அரசியல் | 0

ஊழலில் அல்லது முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை சகித்துக் கொள்ள முடியாது. ஊழல் அபாயத்தை ஒழிப்பதில், கட்சியினரும், அரசும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும்.

ஊழலுக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும்,” என, டில்லி காங்கிரஸ் மாநாட்டில் சோனியா ஆவேசமாகவும், கோபமாகவும் பேசினார்.

காங்கிரஸ் கட்சியின் 125வது ஆண்டு, அகில இந்திய மாநாடு டில்லிக்கு அருகே புராரி என்ற இடத்தில் நேற்று காலை 11 மணிக்கு துவங்கியது. காங்கிரஸ் கட்சிக் கொடியை சோனியா ஏற்றி வைத்துவிட்டு, மாநாட்டு மேடைக்கு வந்தார். அவருடன் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலர்கள் மற்றும் நிர்வாகிகளும் மேடையில் அமர்ந்திருந்தனர். மிகப்பெரிய மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த உள் அரங்கில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள், நாடெங்கிலும் இருந்து வந்து கலந்து கொண்டனர்.

மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா பேசியதாவது;ஊழல் மற்றும் முறைகேடான நடவடிக்கைகள் விஷயத்தில் சகிப்புத் தன்மைக்கே இடமில்லை. ஊழலை ஒழிப்பதில் கட்சியினரும், அரசும் முனைப்புடன் செயல்பட வேண்டும். ஊழலுக்கு காங்கிரஸ் கட்சி துணைபோகாது. ஊழல்வாதிகளையும் ஆதரிக்காது. ஊழலை ஒழிப்பதற்கு முக்கியமாக ஐந்து யோசனைகளை செயல்படுத்த வேண்டும். பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு இருப்பவர்கள், அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் மீது அதிகமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன. ஆனால், இந்த ஊழல் வழக்குகள் விசாரிக்கப்படாமல் ஆண்டுக்கணக்கில் கிடக்கின்றன. எனவே, ஊழல் வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்கு தனி கோர்ட்டுகளை அமைக்க வேண்டும். மக்கள் மத்தியில் நிலவும் அதிருப்தியை போக்க வேண்டும். ஊழல் பேர்வழிகளுக்கு விரைவில் தண்டனை வாங்கித் தர வேண்டும்.அரசுத் துறைகளில் நடைபெறும் ஒப்பந்தங்கள், கொள்முதல் நடவடிக்கைகள் உள்ளிட்டவை ஒளிவு மறைவு இன்றி வெளிப்படையாக நடக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்காக முறையான சட்டத்தையும் இயற்ற வேண்டும். அவ்வாறு இயற்றப்படும் சட்டத்தை உறுதியாக அமல்படுத்த வேண்டும்.

நடைமுறை சிக்கல் என்ற காரணங்கள் கூறி வலுவிழக்கச் செய்யக் கூடாது.ஊழல்கள் பெரிதும் உருவாக காரணம் நிலம் கையகப்படுத்தும் விஷயங்கள்தான். நிலஒதுக்கீடு மற்றும் நிலம் கையகப்படுத்தும் விஷயங்களில் அதிகாரிகளுக்கு என இருக்கும் பிரத்யேகமான அதிகாரங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும். மேலும் அந்த உரிமைகளையும், அதிகாரங்களையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.இயற்கை வளங்கள் கொள்ளை போகாமலும், அதே சமயம் அவற்றை முறைப்படுத்துவதிலும் ஒரு தெளிவான செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். முறையான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு வெளிப்படையாக ஏலம் நடத்தப்பட வேண்டும்.

பேராவல் வேண்டாம்: காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் எளிமையை கடைபிடிக்க வேண்டும். ஆடம்பரமான வாழ்க்கை வாழ வேண்டும், சொத்துக்களை சேர்க்க வேண்டும் என்ற பேராவல் இல்லாமல், நேர்மையாகவும், நாணயமாகவும் இருக்க வேண்டும்.ஊழல்களுக்கு உடந்தையாக பிரதமர் மன்மோகன் சிங் இருப்பதாக பா.ஜ., சமீப காலமாக குற்றம்சாட்டி வருகிறது. இதை ஏற்க முடியாது. இது மிகவும் கீழ்த்தரமான குற்றச்சாட்டு. பிரதமரின் நேர்மையையும், நாணயத்தையும் சந்தேகம் கொள்ள முடியாது. எனவே பிரதமரை பா.ஜ., விமர்சிப்பது கேவலமான செயல். பிரதமருக்கு முழுமையான ஆதரவையும், ஒத்துழைப்பையும் காங்கிரஸ் கட்சி அளிக்கும். ஊழல் குற்றம் சாட்டப்பட்ட நிலையிலேயேகூட, காங்கிரஸ் தனது கட்சியினர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அசோக் சவான் உட்பட பலரும் ராஜினாமா செய்தனர். ஆனால், ஊழல் புகாரில் சிக்கித் தவிக்கும் தனது கட்சியைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை நீக்கம் செய்ய பா.ஜ., முன்வரவில்லை. எனவே, ஊழல்கள் பற்றி பேச பா.ஜ., வுக்கு எந்தவிதமான தகுதியோ, நியாயமோ கிடையாது. இரட்டை நிலையை மேற்கொள்ளும் அக்கட்சி பார்லிமென்டை முடக்கிய செயல் கண்டனத்துக்கு உரியது.

பொதுவாழ்க்கையில் ஊழல் செய்பவர்களை தண்டிக்க வழி செய்யும் லோக்பால் மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்ற இப்போதைய அரசு முயற்சி எடுக்கும்.பீகாரில் தோல்வி ஏற்பட்டிருந்தாலும்கூட, மனம் தளரக் கூடாது. அங்கு கட்சிக்கு அடித்தளம் இல்லாமல் உள்ளது. திடமான சிந்தனையோடு கட்சியை வளர்க்க பாடுபட வேண்டும். மத்தியில் பிற கட்சிகளுடன் கூட்டணியில் உள்ளோம் என்பதற்காகவே, அந்தந்த மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதை தொண்டர்களும், நிர்வாகிகளும் கைவிட்டுவிடக் கூடாது. கூட்டணி ஒருபுறம் இருந்தாலும், கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் தொண்டர்கள் தீவிரமாக இருக்க வேண்டும்.மேலும், பணவீக்கத்தை குறைப்பதுடன் விலைவாசியைக் குறைப்பதும் அரசின் கடமையாகும். அதை மத்தியஅரசு மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு சோனியா பேசினார்.

“கூட்டணி பற்றி எதுவும் இல்லை’ : சோனியாவுக்கும், பிரதமருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாகவும், இடைத்தேர்தல் கூட வரலாம் என்றும் இருநாட்களுக்கு முன் தகவல்கள் வெளியாகின. ஆனால், நேற்றைய மாநாட்டில் பிரதமரை புகழ்ந்தும், பாராட்டியும் சோனியா பேசினார். இதன்மூலம் இதுபோன்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது பரபரப்பாக பேசப்படும், “2 ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றியோ, தி.மு.க.,வுடனான கூட்டணி பற்றியோ நேற்றைய மாநாட்டில் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.நேற்றைய மாநாட்டில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகளை பிரதமரும், சோனியாவும் சால்வை அணிவித்து கவுரவப்படுத்தினர். தமிழகத்தில் இருந்து சோணைமுத்துபிள்ளை என்ற தியாகி கவுரவிக்கப்பட்டார்.தவிரவும் காந்தி, நேரு, இந்திரா, லால்பகதூர் சாஸ்திரி பணிகளைப் பாராட்டிய சோனியா, நரசிம்மராவ் செய்த பொருளாதார சீர்திருத்தங்களையும் பாராட்டினார்.

“பெரும்பான்மை, சிறுபான்மை மதவாதம் இரண்டும் தோற்கடிக்கப்பட வேண்டும்’: காங்கிரஸ் கட்சியின் இரண்டு நாள் மாநாடு, டில்லி அருகே புராரி கிராமத்தில் நேற்று துவங்கியது. இம்மாநாட்டில் பேசிய கட்சியின் தலைவர் சோனியா கூறியதாவது:மதவாதம் மற்றும் பயங்கரவாத செயல்களில் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த அமைப்புகள் ஈடுபடுகின்றன. எந்த அமைப்பினர் பயங்கரவாதத்தில் ஈடுபட்டாலும் அது தவறே.பெரும்பான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் என, இந்த விஷயத்தில் யாரையும் நாங்கள் வேறுபடுத்தி பார்க்க விரும்பவில்லை. மதவாத செயல்களில் ஈடுபடும் அனைவரும் ஆபத்தானவர்களே. அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்.

அனைத்து விதமான மதவாதத்திற்கு எதிராகவும் காங்கிரஸ் எப்போதும் போராடி வருகிறது. குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மதத்தை பயன்படுத்துவதே மதவாதம். சமூகத்தை பிளவுபடுத்தவும், மக்களிடையே பிரிவினையை உண்டாக்கவும், வெறுப்புணர்வை உண்டாக்கவும் மதத்தை பயன்படுத்துவதே மதவாதம்.மதத்தை ஒரு கவசமாக பயன்படுத்திக் கொண்டு, தனி நபர்களுக்கும், நிறுவனங்களும் கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதும், மக்களை வன்முறையில் ஈடுபட தூண்டுவதையும் நாடு புறக்கணிக்க முடியாது. அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.இவ்வாறு சோனியா பேசினார்.

பின்னர் மாநாட்டில், காங்கிரஸ் கட்சியின் 125வது ஆண்டு கொண்டாட்டம் குறித்த தீர்மானத்தை அமைச்சர் ஏ.கே.அந்தோணி முன்மொழிய, அமைச்சர் குலாம்நபி ஆசாத் வழிமொழிந்தார். பின்னர் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அரசியல் தீர்மானத்தை அமைச்சர் பிரணாப் முகர்ஜி முன்மொழிந்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:பயங்கரவாதிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கும் இடையேயான தொடர்புகள் பற்றி விசாரணை நடத்த வேண்டியது அவசியம். இந்த விவகாரத்தில் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மத பழமைவாத அமைப்புகளால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தை புறக்கணிக்க முடியாது. பயங்கரவாதம் எங்கிருந்து, எந்த வடிவில் வந்தாலும் அதை கடுமையாக இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.இந்திய ஜனநாயகத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பது மதசார்பின்மை. நாட்டின் அரசியலுக்கு இது மிகவும் அடிப்படையானது. பா.ஜ., மற்றும் அதன் சார்பு அமைப்புகளின் கொள்கைகளால் இதற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்., போன்ற அமைப்புகள் வெறுப்பையும், விரோதத்தையும் பரப்பி வருகின்றன.

இந்தியாவை துண்டாடுவதற்கான நயவஞ்சக வேலைகளில் ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத் போன்றவை ஈடுபட்டுள்ளன. அனைத்து குடிமக்களையும் பாதுகாக்க தவறி விட்டால், அது நமது எதிர்காலத்தில் ஒரு களங்கத்தை ஏற்படுத்தி விடும்.பொருளாதார முன்னேற்றம் குறித்த ஆரவார பேச்சுக்கள் மற்றும் போலி தேசியவாத செயல்களின் பின்னணியில், தங்களின் தீங்கான செயல்களையும், அத்துமீறல்களையும் பா.ஜ., – ஆர்.எஸ்.எஸ்., மற்றும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் மறைத்து வருகின்றனர்.குஜராத் மக்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் படும் துன்பங்களை பார்த்துக் கொண்டு நாம் சும்மா இருக்க முடியாது.மத வன்முறைகளை கட்டுப்படுத்தவும், அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை தண்டிக்கவும் மத வன்முறை தடுப்புச் சட்டம் கொண்டு வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு பாராட்டுக்கள். அயோத்தி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பிற்காக காத்திருக்க வேண்டும். அதே நேரத்தில், பாபர் மசூதியை இடித்தவர்களை நீதியின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *