தர்மபுரி : “”ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் திட்டமிட்டப்படி நடந்து வருகிறது. பணிகள், 2012 டிசம்பரில் முடிக்கப்படும்,” என, துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட மூன்றாம் தொகுப்பில், அரூரில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சமநிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணியை துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் 1,928 கோடியில், ஐந்து தொகுப்பாக நடந்து வருகிறது. முதல் கட்ட பணி நடந்து வருகிறது; இப்பணிகள் 2012 ஆகஸ்டில் முடிக்கப்படும். இது வரையில் 15 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. திட்ட பணிகள் எதிர்பார்த்ததை விட வேகமாக நடந்து வருகின்றன. இரண்டாம் தொகுப்பு பணிகள், 2012 ஜூனிலும், மூன்றாம் கட்ட பணிகள் 2012 டிசம்பரிலும், நான்காம் கட்ட பணிகள் 2012 அக்டோபரிலும், ஐந்தாம் கட்ட பணிகளுக்கு, கடந்த 22ம் தேதி ஒப்பந்தபுள்ளி, தொழில் நுட்ப ஆவணங்கள், மதிப்பாய்வு குழுவின் உத்தரவு பெற்று, பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஐந்தாம் கட்ட பணிகளுக்கு 203 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் கட்டமாக 56 லட்ச ரூபாய் மதிப்பில் பணிகள் துவங்கப்படும்.
மூன்றாம் கட்ட தொகுப்பு பணிக்கு உட்பட்ட அரூரில் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட சமநிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணி இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் 2012 டிசம்பரில் முழுமையாக முடிக்கப்படும்.பணிகளை விரைந்து முடிக்க மாதம் ஒரு முறை நான் நேரடியாக வந்து திட்ட பணிகளை ஆய்வு செய்து வருகிறேன்.திட்ட பணிகள் மந்தமாக நடக்கிறது என கூறுவோர், திட்ட பணிகளை நேரில் வந்து பார்வையிடலாம். அவர்களுக்கு நான் நேரத்தை ஒதுக்குகிறேன்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
Leave a Reply