நாமக்கல் : ஐயப்ப சீசன் மற்றும் தொடர் மழை காரணமாக, கடந்த ஒரு வாரத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு 47 காசுகள் வீதம், முட்டை விலை குறைந்துள்ளது.
நாமக்கல் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் ஆயிரத்துக்கும் அதிகமான கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இப்பண்ணைகளில் நாள்தோறும் மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை சத்துணவு திட்டம், கேரள மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
குளிர் சீசன் காரணமாக, கடந்த நவம்பர் மாதம் முட்டை விலை கிடுகிடுவென ஏற்றம் கண்டது. அதன்படி முட்டை, கடந்த நவம்பர் மாதம், 290 காசுகள் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என, கோழிப்பண்ணையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.
முட்டை விலையேற்றம் காரணமாக ஓட்டல்களில், முட்டை தயாரிப்பு உணவுப் பொருட்களின் விலையும் ஏற்றம் கண்டது. இந்நிலையில், கடந்த மாதம் ஒரே நாளில் முட்டை விலை 10 காசு வீதம் குறைத்து, 280 காசாக நிர்ணயிக்கப்பட்டது. அந்த விலை தொடர்ந்து இரு வாரங்களுக்கு மேல் நீடித்து வந்த நிலையில், 2 காசு வீதம் முட்டை ஏற்றம் கண்டு 282 காசாக நிர்ணயிக்கப்பட்டது. இச்சூழலில், கார்த்திகை மாதம் துவங்கியதால், ஐயப்பன் கோவில் சீசன் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் பரவலாக முட்டை நுகர்வு குறைந்தது.
முட்டை விலையை குறைக்க வேண்டிய நிலைக்கு, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவினர் தள்ளப்பட்டனர். அதன்படி, கடந்த 27ம் தேதி முட்டை விலை 15 காசு குறைத்து, 267 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. அதையடுத்து, 29ம் தேதி மீண்டும் 15 காசு குறைத்து 252 காசாகவும், டிச., 2ம் தேதி 17 காசுகள் குறைத்து 235 காசாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு 47 காசுகள் வீதம், முட்டை விலை குறைந்துள்ளது. அய்யப்பன் கோவில் சீசன், தொடர் மழைப்பொழிவு இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. முட்டை விலை 235 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளபோதும், பண்ணைகளில் முட்டை 190 காசுகள் வீதமே கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், கோழிப்பண்ணையாளர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதே நேரத்தில், சில்லரை வியாபாரிகள், முட்டைக்கு 45 முதல் 50 பைசா வரை லாபம் பார்ப்பதால், மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Leave a Reply