கடந்த ஜுன் மாதம், பெட்ரோலுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டது.
அதிலிருந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன. அப்படி நிர்ணயிக்கத் தொடங்கியதில் இருந்து இதுவரை 5 தடவை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு விட்டது. இந்நிலையில், நேற்று இரவு 6-வது தடவையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் 96 காசுகள் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு, தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு அமலுக்கு வந்தது.
மற்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகியவையும் இதே அளவுக்கு பெட்ரோல் விலையை உயர்த்துகின்றன. இவற்றின் விலை உயர்வு அறிவிப்பு இன்று (புதன்கிழமை) நள்ளிரவு அமலுக்கு வருகிறது.
இத்துடன், இந்த ஆண்டில் மட்டும் 8-வது தடவையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு குறித்து இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது, கச்சா எண்ணெய் விலை 73 டாலராக இருந்தது. ஆனால், தற்போது 90 டாலராக உயர்ந்து விட்டது. இருப்பினும், நாங்கள் 5 தடவை மட்டுமே விலையை உயர்த்தி உள்ளோம்.
இப்போதும், பெட்ரோலை லிட்டருக்கு ரூ.4.17-ம், டீசலை லிட்டருக்கு ரூ.5.40-ம், சமையல் கியாஸ் சிலிண்டரை ரூ.272.19-ம், மண்எண்ணெயை லிட்டருக்கு ரூ.17.72-ம் நஷ்டத்தில் விற்று வருகிறோம்.
நேற்று முன்தினம் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடிந்தவுடனே, பெட்ரோல் விலையை உயர்த்தி இருப்போம். அதற்கு பெட்ரோலிய அமைச்சகமும் அனுமதி அளித்திருந்தது. ஆனால், ஓரிரு நாட்கள் பொறுத்திருக்குமாறு கடைசி நேரத்தில் எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. விலையை உயர்த்த பெட்ரோலிய அமைச்சகம் நேற்று மீண்டும் அனுமதி அளித்தது. இதனால் விலையை உயர்த்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெட்ரோல் விலை உயர்த்தப்பட்ட போதிலும், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டீசல் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பை மத்திய அரசே தன் கைவசம் வைத்திருக்கிறது. அதனால், தொடர்ந்து 4-வது தடவையாக, பெட்ரோல் விலை மட்டும் உயர்த்தப்பட்டு வருகிறது. டீசல் விலை உயர்த்தப்படவில்லை.
இருப்பினும், டீசல் விலையை உயர்த்துவது குறித்த முடிவை மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி தலைமையிலான மந்திரிகள் குழுவிடம் பெட்ரோலிய அமைச்சகம் ஒப்படைத்துள்ளது. இந்த மந்திரிகள் குழு, வருகிற 22-ந் தேதி கூடுகிறது. அப்போது, டீசல் விலை உயர்த்தப்படுமா? இல்லையா? என்று தெரியவரும்.
டீசல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்துமாறு பெட்ரோலிய அமைச்சகம் சிபாரிசு செய்துள்ளது. அதுபற்றி மந்திரிகள் குழு ஆய்வு செய்து முடிவு எடுக்கும். டீசல் விலையை உயர்த்தினால், சரக்கு கட்டணம் உயர்ந்து, அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது.
எனவே, டீசல் விலையை உயர்த்தாத பட்சத்தில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை சரிக்கட்ட அவற்றுக்கு துணை பட்ஜெட்டில் கூடுதலாக நிதி ஒதுக்குமாறு பிரணாப் முகர்ஜியிடம் வற்புறுத்த பெட்ரோலிய மந்திரி முரளி தியோரா திட்டமிட்டுள்ளார்.
இந்த ஆண்டில் மட்டும் பெட்ரோல் விலை 8-வது தடவையாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 22-ந் தேதி 3 ரூபாய் 1 காசும், ஏப்ரல் 1-ந் தேதி 54 காசுகளும், ஜுன் 26-ந் தேதி 3 ரூபாய் 79 காசுகளும், செப்டம்பர் 8-ந் தேதி 10 காசுகளும், செப்டம்பர் 29-ந் தேதி 29 காசுகளும், அக்டோபர் 15-ந் தேதி 78 காசுகளும், நவம்பர் 8-ந் தேதி 35 காசுகளும் உயர்த்தப்பட்டது. நேற்று 3 ரூபாய் விலை உயர்த்தப்பட்டது.
எனவே, இந்த ஆண்டில், 8 தவணைகளாக, பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 ரூபாய் 86 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
Leave a Reply