கல்வி – ஆராய்ச்சி துறைகளில் இந்தியா – பிரான்ஸ் கூட்டு ஒப்பந்தம்

posted in: கல்வி | 0

இந்தியா – பிரான்ஸ் நாடுகளிடையே கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறை ஒத்திசைவு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

பிரான்ஸ் நாட்டின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறை அமைச்சர் திருமதி. வலேர் பெக்ரஸ் மற்றும் இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் திரு. கபில் சிபல் ஆகியோர் சந்தித்து, கல்வி மற்றும் ஆராய்ச்சி துறைகளில் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையே கூட்டு முயற்சிகளை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடி, 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். ஆராய்ச்சி துறைகளில் நானோடெக்னாலஜி, பயோடெக்னாலஜி, பருவநிலை கணிப்பு, வான்வெளி பொறியியல், மேம்படுத்தப்பட்ட கணிதம் போன்றவை முக்கியமானவை.

புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் விவரம்:

* முதல் ஒப்பந்தம் மூலமாக, பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழகமும்(ஐ.ஐ.எஸ்சி.) அதற்கு சமமான பிரான்ஸ் நாட்டின் முக்கிய உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்காக சர்வதேச கூட்டு ஆய்வகத்தை ஏற்படுத்துவது. இந்த ஆய்வகமானது இந்தியா, பிரான்ஸ் மற்றும் வேறு நாடுகளிலுள்ள ஆராய்ச்சி நிறுவனங்களுடனும் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்ளும்.

* இரண்டாம் ஒப்பந்தம் வாயிலாக, பிரான்ஸ் நாட்டிலுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான பாரிஸ் கல்வி நிறுவனம் மற்றும் இந்தியாவிலுள்ள, ஐ.ஐ.டி. -கள்(காரக்பூர், மும்பை, சென்னை, கான்பூர், டெல்லி, குவஹாத்தி, ரூர்கி) ஆகியவற்றுக்கிடையே, கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் இணைந்து செயல்படுவதோடு, ஐரோப்பிய கமிஷனின் நடவடிக்கைகளான, எராஸ்மஸ் முண்டுஸ், மற்ற ஆர்வமுள்ள நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் வெளிப்புற ஒத்துழைப்பு விண்டோ போன்றவற்றிலும் பங்குகொள்ள வழிவகை செய்கிறது.

மேலும், இரண்டாவது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ராஜஸ்தான் ஐ.ஐ.டி. தொடர்பான ஒரு குறிப்பிட்ட முக்கிய வரைவை இருநாட்டு உயரதிகாரிகளும் முன்னதாகவே கூடி கலந்தாலோசித்து இறுதி செய்தார்கள். அதன்படி, பிரான்ஸ் நாட்டு நிறுவனங்களின் கூட்டமைப்பானது, ராஜஸ்தான் ஐ.ஐ.டி. உடன், கல்விரீதியாகவும், விஞ்ஞானரீதியாகவும் இணைந்து செயல்பட்டு, ஆரோக்கியத்திற்கான தொழில்நுட்பம், மறுசுழற்சி ஆற்றல், வான்வெளி, குவாண்டம் கணக்கீடு, சிஸ்டம்ஸ் ஒருங்கிணைப்பு மற்றும் வடிவமைப்பு, மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேம்பாட்டு ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். இந்த பிரான்ஸ் நிறுவன கூட்டமைப்பானது, அந்நாட்டு உயர்கல்வி துறை, ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களை உள்ளடக்கியது. மேலும் இதன்மூலம் எதிர்காலத்தில் இந்திய – பிரெஞ்சு தொழில்துறை கூட்டமைப்பும் ஏற்படும்.

இந்த இரு அமைச்சர்களின் குழுக்களிலும் விஞ்ஞானிகள், மூத்த கல்வியாளர்கள், கல்வி நிறுவன தலைவர்கள் மற்றும் ஆராய்ச்சி நிபுணர்கள் அடங்கியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *