கோவை: “இந்திய மறுவாழ்வு கவுன்சில் துவங்கப்பட்ட பின், கல்வி கற்கும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது,” என்று கவுன்சிலின் துணை இயக்குனர் மிஸ்ரா பேசினார்.
அவினாசிலிங்கம் பல்கலை மற்றும் இந்திய மறுவாழ்வு கவுன்சில் இணைந்து நடத்திய இந்த தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது.
இந்திய மறுவாழ் கவுன்சில் துணை இயக்குனர் மிஸ்ரா பேசியது: 1992ல் இந்திய மறுவாழ்வு சங்கம் துவங்கப்பட்ட போது 25 கல்வி நிறுவனங்களில் 16 படிப்புகள் மட்டுமே கற்பிக்கப்பட்டன. இன்று 385 நிறுவனங்களில் 750 படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கான இந்த கல்வி நிறுவனங்களில் கடந்த ஓராண்டில் 15 ஆயிரம் பேர் பயிற்சி பெற்றுள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வகுப்புகள் 11 திறந்தவெளி பல்கலைகளுடன் இணைந்து நடத்தப்படுகிறது.
இன்று உலகின் பத்து சதவீத மக்கள் தொகையில் 650 பேர் மாற்றுத் திறன் உள்ளவர்களாக உள்ளனர். இந்தியாவில் 60-70 மில்லியன் பேர் மாற்றுத் திறனாளிகள். இதில் 30 மில்லியன் பேர் குழந்தைகள். 1992ல் இந்திய மறுவாழ்வு கவுன்சில் துவங்கப்பட்ட பின், மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் புதிய வெளிச்சம் பிறந்துள்ளது. கல்வி கற்கும் மாற்றுத் திறனாளிகள் அதிகரித்துள்ளனர்.
சிறப்புக் குழந்தைகளை கையாளும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி பல்கலை மானியக்குழுவுக்கு (யு.ஜி.சி.,) பரிந்துரை செய்தபின், இரண்டு சிறப்பு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த பயிற்சித் திட்டங்களுக்கு, யு.ஜி.சி., 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது, என்றார்.
அவினாசிலிங்கம் பல்கலை துணைவேந்தர் ஷீலா ராமச்சந்திரன் பேசியது: உயர்கல்வி படிக்கும் மாற்றுத் திறனாளிகள் வெறும் 0.3 சதவீதமும், பள்ளியில் சேருவோர் 10 சதவீதமும் மட்டுமே. கவுன்சில் துவங்கப்பட்ட பின் அவினாசிலிங்கம் பல்கலையில் 150 மாணவியர் உயர்கல்வி முடித்து பல்வேறு உயர் பதவிகள் வகிக்கின்றனர், என்றார்.
தலைமை வகித்த பல்கலையின் புதிய வேந்தர் மீனாட்சி சுந்தரம் பேசுகையில், “தமிழகத்தில் அவினாசிலிங்கம் பல்கலைதான் முதன் முதலாக மாற்றுத் திறனாளிகளை கல்வி எனும் குடையின் கீழ் ஒருங்கிணைத்தது. இன்று தமிழகம் முழுவதும் உள்ள சிறப்பு ஆசிரியர்களில், 80 சதவீதம் பேர் இப்பல்கலையில் படித்தவர்கள்,” என்றார்.
சர்வதேச பார்வையற்றோர் கல்விக்குழு செயலாளர் மணி, பல்கலையின் சிறப்புக் கல்வியியல் துறைத் தலைவர் பிரேமாவதி, தேர்வாணையர் மீரா, டீன் சந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சிறப்பு கல்வியாளர்கள் பங்கேற்றனர்.
Leave a Reply