காதலின் சின்னமான தாஜ்மஹால் அழிவு சின்னமாக மாறிவிடும்?ஆய்வாளர்கள் எச்சரிக்கை

posted in: உலகம் | 0

லண்டன்: காதலின் சின்னமாக கருதப்படும், தாஜ்மஹாலுக்கு சுற்றுலா பயணிகளால் பேராபத்து ஏற்பட்டுள்ளது, என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ்மஹால் கட்டட கலையின் மாண்பை பறைசாற்றும் வகையில் வெண்பளிங்கு கற்களால் இழைத்து கட்டப்பட்டுள்ளது. அதன் கம்பீரமான அழகு, காண்போர் கண்களை பிரமிப்பில் ஆழ்த்தும்; கல்நெஞ்சத்திலும் காதலின் எல்லையை உணர்த்தும். தாஜ்மஹாலின், அழகை கண்டு மயங்காதவர் எவருமிலர். இந்த நிலையில், கடந்த 1983ம் ஆண்டு ஐ.நா., உலக கலாசார நிறுவனம்(யுனெஸ்கோ) தாஜ்மஹாலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. நெஞ்சை கொள்ளை கொள்ளும் தாஜ்மஹாலின் அழகை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளிலிருந்தும், நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில், சுற்றுப்புறச் சூழல் சீர்கேட்டால் தாஜ்மஹாலின் வெண்மை நிறம் மங்க துவங்கி விட்டதாக ஆய்வாளர்கள் ஏற்கனவே எச்சரிக்கை மணி அடித்துள்ளனர். இதை தொடர்ந்து, அதிக சுற்றுலா பயணிகளின் வருகையால், தாஜ்மஹாலின் ஸ்திரத்தன்மை குறைய துவங்கி விட்டதாக, தற்போது பிரிட்டன் ஆய்வாளர்கள் அடுத்த எச்சரிக்கை மணி அடித்துள்ளனர். இது குறித்து ஆய்வு நடத்திய ஆய்வாளர் இயன் பியர்சன் கூறியதாவது: தாஜ்மஹாலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவதால், அதன் தரைப்பகுதிகளில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இன்னும் 20 ஆண்டுகளில் தாஜ்மஹாலின் தரைப்பகுதிகள் பலத்த சேதமடைய வாய்ப்பு உள்ளது. இதனால், தாஜ்மஹாலின் அழகு மங்கிவிடும். எனவே, தாஜ்மஹாலை பாதுகாக்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், காதலின் சின்னமான தாஜ்மஹால் அழிவு சின்னமாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. தாஜ்மஹாலின் குறிப்பிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்குவதை நிறுத்த வேண்டும். இதே போன்று, எகிப்திலுள்ள பிரமிடுகள், வரலாற்று சிறப்பு மிக்க வெனிஸ் நகரம் ஆகியவற்றிற்கு சுற்றுலா பயணிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *