கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காய விலை ரூ.55-க்கு குறைந்தது; கடைகளில் ரூ.60-க்கு விற்பனை

posted in: மற்றவை | 0

சென்னையில் வெங்காயம் விலை தினசரி 10 ரூபாய் குறைந்து வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் 55 ரூபாய்க்கு இன்று வெங்காயம் விற்கப்பட்டது.

கடந்த 1 மாதமாக பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக வெங்காய விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டது.

தமிழ்நாட்டிற்கு உள்ளூரில் இருந்து கிடைக்கும் வெங்காயம் போதாது என்பதால் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து தினமும் 70 லாரி வெங்காயம் வரவழைக்கப்படும். ஆனால் அந்த மாநிலங்களிலும் கனமழை பெய்திருந்ததால் வெங்காய செடிகள் மழைநீரில் மூழ்கி அழுகி விட்டன.

இதனால் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டதால் அங்கிருந்து சென்னைக்கு வெங்காயம் வருவது குறைந்தது.யாரும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு சில்லரை கடைக்காரர்கள் வெங்காய விலையை கிலோ ரூ.100-க்கு விற்க தொடங்கினார்கள்.

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏற்றுமதிக்கு தடை விதித்தது. பாகிஸ்தானில் இருந்தும் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு பாகிஸ்தான் வெங்காயம் வந்துள்ளதால் இந்த மாநிலங்களில் உற்பத்தியாகும் வெங்காயம் தமிழகம் உள்பட பிற மாநிலங்களுக்கு அதிகம் வருகிறது. இதனால் வெங்காயம் விலை தினமும் கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் ரூ.80-க்கு விற்ற வெங்காயம் நேற்று ரூ.70 ஆனது. இன்று ரூ.60 ஆக குறைந்துள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ 55 ரூபாய்க்கு வெங்காயம் இன்று விற்கப்பட்டது. இதேபோல் சாம்பார் வெங்காயம் (சிறியது) கிலோ ரூ.50-க்கு விற்பனையானது. வெளியில் உள்ள மற்ற மளிகை கடைக்காரர்கள் ரூ.60-க்கு வெங்காயம் விற்கிறார்கள்.

இதுபற்றி கோயம்பேடு மொத்த வெங்காய டீலரான நீலகிரி டிரேடிங் கம்பெனி உரிமையாளர் சாம்பசிவராவ் கூறியதாவது:

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக 50 லாரி வெங்காயம் வரும் தட்டுப்பாடு சமயத்தில் 12 லாரி, 15 லாரிகளில்தான் வெங்காயம் வந்தது. ஆனால் இப்போது அரசு எடுத்த முயற்சி காரணமாக மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திராவில் இருந்து சென்னைக்கு நிறைய லாரிகளில் வெங்காயம் வந்திறங்கியது. இன்று 70 லாரிகளில் வெங்காயம் வந்தது.

நாங்கள் 45 ரூபாய்க்கு ஒருகிலோ வெங்காயத்தை கோயம்பேடு கடைக்காரர்களுக்கு கொடுக்கிறோம். அவர்கள் 55 ரூபாய்க்கு விற்கிறார்கள். இதை மளிகை கடைக்காரர்கள் வாங்கி சென்று 60 ரூபாய் அல்லது அதற்கு மேலும் வைத்து விற்கிறார்கள்.

இதேபோல் 2-ம் ரக வெங்காயத்தை (சிறிய சைஸ்) கிலோ ரூ.27-க்குதான் கொடுக்கிறோம். இது கொஞ்சம் ஈரப்பதமாக இருக்கும். ஆனால் இந்த வெங்காயத்தை கூட சில மளிகைக் கடைக்காரர்கள் 60 ரூபாய்க்கு விற்கிறார்கள் என்பதுதான் வேதனையாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *