சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்ததை அடுத்து கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு பெட்ரோல்- டீசல் விலையை உயர்த்தியது.
அதன் பிறகு எண்ணை நிறுவனங்களே விலையை உயர்த்தி கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.
இதைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் எண்ணை விலை உயரும் போதெல்லாம் சிறிது, சிறிதாக பெட்ரோல்- டீசல் விலையை உயர்த்தி வருகின்றனர். ஜூன் மாதத்துக்கு பிறகு மட்டும் 4 தடவை சிறிய அளவில் உயர்த்தி உள்ளன.
தற்போது கச்சா எண்ணை விலை சர்வதேச சந்தையில் அதிக அளவில் அதிகரித்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணை 90 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்துக்கு பிறகு மட்டும் 18 சதவீதம் அதிகரித்து உள்ளது. இதனால் எண்ணை நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
ஒவ்வொரு லிட்டர் டீசலுக்கும் தலா 4 ரூபாய் 71 காசு இழப்பு ஏற்பட்டு வருகிறது. நிதி ஆண்டில் மட்டும் எண்ணை நிறுவனங்கள் ரூ.65 ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்திக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
எனவே நஷ்டத்தை சரி கட்ட எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்துள்ளன. அடுத்த வாரம் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று எண்ணை நிறுவன அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.
சமையல் கியாஸ், மண்எண்ணை விலையை உயர்த்த வேண்டுமானால் அதற்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். எனவே அவற்றின் விலை உயர வாய்ப்பு இல்லை.
பெட்ரோல்-டீசல் விலை ஏற்கனவே அடிக்கடி உயர்த்தப்பட்டு வந்ததால் விலைவாசி அதிக அளவில் உயர்ந்தது. இதனால் பண வீக்கம் அதிகரித்தது. ஜூன் மாதம் பெட்ரோல்- டீசல் விலை உயர்த்தப்பட்ட போது பண வீக்கம் உச்ச கட்டமாக 11 சதவீதம் அதிகரித்தது. அதன் பிறகு சற்று குறைந்து தற்போது 8.5 சதவீதமாக உள்ளது.
பெட்ரோல்-டீசல் விலை இப்போது உயர்த்தப்பட்டால் வலை வாசி மேலும் உயர்ந்து பண வீக்கம் ஏற்படும்.
பண வீக்கத்தை 5.5 சதவீதத்துக்குள் கொண்டு வர ரிசர்வ் பாங்கி இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால் பெட்ரோல்- டீசல் விலை உயர்வு இந்த இலக்கை எட்டவிடாது என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply