சீன அறிஞர் பெறுகிறார் நோபல் பரிசு : எதிர்ப்பைக் காட்ட சீன அரசு விஷமம்

posted in: உலகம் | 0

பீஜிங்: நார்வே தலைநகர் ஆஸ்லோவில், சீன இலக்கியவாதியான லியு ஷியாபோவுக்கு நாளை வழங்கப்படும் நோபல் பரிசு விழாவில் அவரது உறவினர்கள், நாட்டின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வதை தடை செய்யும் வகையில், சீனா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதே நாளில் நடக்க இருக்கும் வேறு சில முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளாலும் சீனா கதிகலங்கிப் போயிருக்கிறது.

சீனாவின் முக்கிய இலக்கியவாதியும், மனித உரிமைப் போராளியுமான லியு ஷியாபோவுக்கு நாளை, நார்வே தலைநகர் ஆஸ்லோவில் உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட இருக்கிறது. இவ்விழாவில், உலகின் பல நாடுகள் கலந்து கொள்ள இருப்பதாக, நோபல் பரிசு கமிட்டி அறிவித்தது. இதற்கு பதிலடியாக, பல நாடுகள் அவ்விழாவில் பங்கேற்க சம்மதிக்கவில்லை என சீனா தெரிவித்தது. இந்நிலையில், லியுவின் உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் என பலரை, சீன அரசு வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவிடாமல் முடக்கி வைத்துள்ளது. “சைனா யூத் டெய்லி’ இதழில் பணியாற்றிய பிரபல பத்திரிகையாளர் லு யுகாங்கின் மனைவி, ஹாங்காங்கிற்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பிரபல ஓவியரான அய் வெய்வெய், வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர் சமீபத்தில் லியுவுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியவர் என்பது குறிப்பிடத் தக்கது.

சீனாவின் சுயாட்சிப் பகுதிகளில் ஒன்றான, உள் மங்கோலியாவைச் சேர்ந்தவரும், சீன அரசை எதிர்த்து போர்க்கொடி தூக்கியவரும், சீனாவின் அரசியல் கைதியுமான ஹடா என்பவரின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார். உள் மங்கோலியா, சீனப் பிடியில் இருந்து மீட்கப்பட வேண்டும் என்பதை முன்னிறுத்தி, “உள் மங்கோலியா மக்கள் கட்சி’ ஆரம்பித்து போராடியவர் ஹடா. கடந்த 1996 மார்ச் மாதம் இவர் கைது செய்யப்பட்டு, 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். லியுவுக்கு நோபல் பரிசு வழங்க இருக்கும் நாளை, ஹடா விடுதலை செய்யப்பட வேண்டிய நாள். இதையடுத்து, ஹடாவுக்கு மேலும் சிக்கல் ஏற்படுத்தும் விதத்தில், அவரது 16 வயது மகனான உய்லிஸ் என்பவரை தனது பெற்றோருடனான உறவைத் துண்டிக்கும்படி போலீசார் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். உய்லிசுக்கு ஒரு நல்ல வேலை, அழகான வீடு மற்றும் அழகான பெண்தோழி இவற்றை தருவதாக போலீசார் ஆசை காட்டி வருவதாக, நியூயார்க்கிலுள்ள தென் மங்கோலிய மனித உரிமை அமைப்பு ஒன்று கூறியுள்ளது. நாளை, லியுவுக்கு நோபல் பரிசு வழங்கும் விழா, ஹடா விடுதலை செய்யப்படும் நாள் மற்றும் ஐ.நா.,வின் மனித உரிமை நாள். இவையெல்லாம் சேர்ந்து இப்போது சீன அரசை கதிகலங்கச் செய்து கொண்டிருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *