சென்னைக்கு அடுத்த தொழில் வளர்ச்சி மிக்க மாநகரம் கோவை: முதல்வர்

posted in: அரசியல் | 0

சென்னை : “”சென்னை மாநகருக்கு அடுத்த, தொழில் வளர்ச்சி மிக்க மாநகராக கோவை திகழ்கிறது,” என, முதல்வர் கருணாநிதி பேசினார்.

கோவை அவினாசி ரோடு நீலம்பூர் அருகே, 200 கோடி ரூபாய் செலவில், நவீன கலையம்சத்துடன், பிரமாண்டமான முறையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள, “லி மெரீடியன் கோயம்புத்தூர்’ ஐந்து நட்சத்திர ஓட்டல் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் வாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

விழாவில், லி மெரீடியன் ஓட்டல் சேர்மன் பழனி பெரியசாமி பேசுகையில், “”கோவையில் லி மெரீடியன் ஓட்டலின் துவக்கம், எங்கள் வளர்ச்சியை மட்டுமல்லாமல் இந்நகரின் வளர்ச்சியையும் குறிக்கிறது. புதிய பொருளாதார மேம்பாடு மற்றும் வாய்ப்புகளுக்கு கோவை சிறந்த நகரம். இந்நகரில் கிடைக்கும் தொழில் முனைவோரை இந்தியாவில் வேறு எந்த பகுதியுடனும் ஒப்பிட முடியாது. முதல்வர் அளித்த ஊக்கம் காரணமாக, இன்று இந்நகரம் பிரமாண்ட வளர்ச்சி கண்டு வருகிறது,” என்றார்.

“லி மெரீடியன்’ ஐந்து நட்சத்திர ஓட்டலை, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து, “வீடியோ கான்பரன்சிங்’ மூலம், முதல்வர் கருணாநிதி நேற்று திறந்து வைத்தார்.

அப்போது, அவர் பேசியதாவது:சென்னை “லி ராயல் மெரீடியன் ஓட்டல்’ அடைந்துள்ள வளர்ச்சியின் அடிப்படையில், கோவையில் “லி மெரீடியன் கோயம்புத்தூர்’ ஓட்டல் துவங்கப்பட்டுள்ளது. டாக்டர் பழனி ஜி.பெரியசாமி 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஓட்டலை உருவாக்கித் தந்துள்ளார். சில அசவுகரியங்களாலும், என் உடல்நிலை திடீரென பயணத்திற்கு ஒத்துவராத நிலை ஏற்பட்டதாலும், இந்த ஓட்டல் திறப்பு விழாவிற்கு வர இயலவில்லை.தமிழகத்தில் தொழில் வாய்ப்புகளைப் பெருக்கும் வகையில், சர்க்கரை ஆலைகள், கட்டுமானத் தொழில்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற பல தொழில்களின் மூலம், 3,000 பேருக்கு நேரடியாகவும், 30 ஆயிரம் குடும்பங்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை தந்துள்ள பி.ஜி.பி. தொழில் குழுமத்தையும், அதன் நிறுவனர் பழனி ஜி. பெரியசாமிக்கும் என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னைக்கு அடுத்த தொழில் வளர்ச்சி மிக்க, மாநகராக கோவை திகழ்கிறது.

கோவையின் தட்பவெட்ப நிலையும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது. இந்நகருக்கு வரும் தொழில் முகவர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் இந்த ஓட்டல் செயல்பட, என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *