சென்னையில் 3 இடங்களில் குண்டு வெடிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பட்டதாரி வாலிபர் கைது; சிம்கார்டு கொடுத்த கடை உரிமையாளரும் சிக்கினார்

posted in: மற்றவை | 0

சென்னை கோட்டையில் உள்ள முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்துக்கு கடந்த 22-ந்தேதி காலை 8.30 மணிக்கு மர்ம போன் ஒன்று வந்தது.

அதில் பேசிய வாலிபர் சென்னையில் 3 இடங்களில் குண்டு வைக்கப்பட்டுள்ளது. அது எப்போது வேண்டுமானாலும் வெடித்து சிதறலாம் என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டார்.

இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பூக்கடை துணை கமிஷனர் அறிவுச் செல்வம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் மிரட்டல் ஆசாமியை பிடிக்க வலை விரித்தனர்.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் செல்போனில் இருந்து பேசியது தெரிய வந்தது. அந்த செல்போன் எண்ணை வைத்து போலீசார் துப்பு துலக்கினர். அப்போது, திருவான்மியூரை சேர்ந்த பிரபாகர் என்ற பெயரில் சிம்கார்டு வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக பிரபாகரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் எனது பெயரில், யாரோ சிம்கார்டை வாங்கி பேசியுள்ளனர். எனக்கும், இந்த மிரட்டலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறினார்.

இதையடுத்து மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணில் இருந்து யார்- யாருக்கு போன் செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்களை போலீசார் சேகரித்தனர். அப்போது மிரட்டல் ஆசாமி அடையாளம் தெரிந்தது.

மதுரை உசிலம்பட்டி கண்ணனூரை சேர்ந்த ராஜேஷ்குமார் (வயது 25) என்ற வாலிபர் வெடி குண்டு மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், சென்னை தரமணியில் தங்கி உள்ளார். சரியான வேலை எதுவும் கிடைக்காததால், வங்கி கடன், இன்ஸ்சூரன்ஸ் போன்றவற்றை ஏற்பாடு செய்து கொடுத்து கமிஷன் பெற்று வந்துள்ளார். இதற்காக பிரபாகர் தனது அடையாள அட்டையின் ஜெராக்ஸ் காப்பியை ராஜேஷ்குமாரிடம் கொடுத்துள்ளார். இதனை காட்டி, ராஜேஷ்குமார் சிம்கார்டு வாங்கியுள்ளார். இந்த எண்ணில் இருந்துதான் வெடி குண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து ராஜேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

வேலை கிடைக்காத விரக்தியில் இப்படி செய்து விட்டேன் எனனை மன்னித்து விடுங்கள் என்று கூறி ராஜேஷ்குமார் கதறினார்.

இவர் பதுக்கி வைத்திருந்த அடையாள அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

பட்டினப்பாக்கத்தை சேர்ந்த கடை உரிமையாளர் ஒருவர், அடையாள அட்டை காப்பியை சரியாக பார்க்காமல் சிம்கார்டு கொடுத்தது தெரிய வந்தது. அவரும் போலீசில் சிக்கினார். அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். சிம்கார்டுகளை விற்பனை செய்யும் போது, அதற்கான அடையாள அட்டை காப்பியை கவனமாக பார்த்து வாங்க வேண்டும் என்றும் இதில் கவனக்குறைவாக செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *