சென்னை : “சென்னை மாநகர், கடலூர், விழுப்புரம் மற்றும் அரியலூர் மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கான, மேலும் இரண்டு புதிய கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்’ என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விரிவாக்கப்படவுள்ள சென்னை மாநகராட்சி பகுதிகளில் மக்களின் குடிநீர் மற்றும் இதர மாவட்ட மக்களின் குடிநீர் தேவை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருவதால், குடிநீர் தேவைக்காக தொலைதூரப் பகுதிகளிலிருந்து நீராதாரங்கள் அமைக்கவும், பராமரிக்கவும் அதிக செலவாகிறது. இதை கருத்தில் கொண்டு, கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை தமிழக அரசு உருவாக்கியது. முதற்கட்டமாக, சென்னைக்கு அருகே உள்ள மீஞ்சூரில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் இயங்கி வருகிறது. இதேபோல், நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் நெம்மேலியில் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை குடிநீர் வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக விரைவில் ஒரு ஆலோசகரை நியமித்து கடல் நீரை குடிநீராக்கும் விரிவான திட்டம் தயாரித்து, சென்னை, கடலூர், விழுப்புரம் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் குடிநீர் தேவைக்காக, கூடுதலாக இரண்டு கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் நிறுவவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக, சென்னை குடிநீர் தேவைக்காக 200 மில்லியன் லிட்டர் குடிநீரை வினியோகிக்கும் திறன் கொண்ட நிலையம் ஒன்றும், மற்றொன்று கடலூர், விழுப்புரம் மற்றும் அரியலூர் மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காகவும் அமைக்கப்படும். இந்த நிலையங்களின் திறனை படிப்படியாக நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறனுக்கு உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Reply