சிதம்பரம் : சொந்தங்களுக்காக பதவி வகிக்கும் கருணாநிதி மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை என விஜயகாந்த் எம்.எல்.ஏ., கூறினார்.
கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட சிதம்பரம் நேரு நகர், நந்திமங்கலம், குமராட்சி, கீழவன்னியூர், திருநாரையூர் ஆகிய பகுதிகளை தே.மு.தி.க., நிறுவனத் தலைவரும், விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான விஜயகாந்த் நேற்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கன மழையால் கடலூர் மாவட்டம் தான் அதிகம் பாதித்துள்ளது. சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதிகளை பார்வையிடும் போது, குடிசை வீடுகள் இடிந்துள்ளன. இங்கு வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் முதல்வர் கருணாநிதி செம்மொழி பூங்காவை பார்வையிடுகிறார். ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனர். விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்தவர் கருணாநிதி. தான் ஏழை என்று கருணாநிதி முன்னுக்குப் பின் முரணாக கூறுகிறார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவில்லை. சொந்தங்களுக்காக பதவி வகிக்கும் கருணாநிதி மக்களை பற்றி சிந்திக்கவில்லை. தேதர்தல் நேரத்தில் கூட்டணியைப் பற்றி பேசிக் கொள்ளலாம். விருத்தாசலம் தொகுதிக்கு நாளை (இன்று) செல்கிறேன். இவ்வாறு எம்.எல்.ஏ., விஜயகாந்த் கூறினார். பண்ருட்டி ராமச்சந்திரன் உடனிருந்தார்.
Leave a Reply