டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்து வரும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு காங்கிரஸ் சம்மதிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக நேற்றிரவு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வீட்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட இருந்தது. ஆனால், அது ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.
இந்தக் கூட்டம் இன்று நடக்கும் என்று தெரிகிறது.
இக்கூட்டத்தில் கடந்த 17 நாட்களாக ஸ்தம்பித்துப் போயுள்ள நாடாளுமன்றத்தை உயிர்ப்பித்து கூட்டத்தை சுமூகமாக நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயப்படவுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக ஜேபிசி விசாரணை கண்டிப்பாக தேவை. இதைத் தவிர வேறு எந்தத் தீர்வையும் ஏற்க மாட்டோம் எஎன்று எதிர்க்கட்சிகள் திட்டவட்டமாக கூறி விட்டன.
ஜேபிசி விசாரணைக்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் ரயில்வே அமைச்சருமான மமதா பானர்ஜி வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால், இதை திமுக எதிர்க்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் இந்த விஷயத்தில் திமுகவை ஆதரித்து வருகிறார்.
இதனால் காங்கிரஸ் கூட்டணிக்குள்ளேயே குழப்பம் நிலவுகிறது.
மேற்கு வங்கத்தி்ல சட்டசபைத் தேர்தல் வரவுள்ளதால், தான் நல்ல பிள்ளை என்பதாக காட்டிக் கொள்வதற்காக ஜேபிசி விசாரணைக்கு மமதா பானர்ஜியும் சம்மதிக்க ஆரம்பித்துள்ளார்.
தற்போதைய நிலையில் மமதா பானர்ஜி, முதல்வர் கருணாநிதி, சரத் பவார் ஆகியோர் சம்மதித்தால் ஜேபிசி விசாரணைக்கு காங்கிரஸும் சம்மதிக்கும் என்று தெரிகிறது. இந்த மூன்று கட்சிகளின் சம்மதத்தையும் பெறவே நேற்று கூட்டம் நடத்தப்பட இருந்தது. ஆனால், கட்சிகளின் தலைவர்களுக்கு நேரம் ஒத்து வராததால் இன்று அக் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் சரத் பவாரும் திமுக எம்பி டி.ஆர்.பாலுவும் பிரணாப் முகர்ஜியை தனித்தனியே சந்தித்துப் பேசினர். சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய பவார், ஜேபிசி விசாரணையை ஏற்க முடியாது என்றார்.
டி.ஆர். பாலு கூறுகையில், காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் என்ன பேசப்படுகிறது, என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து எங்களது அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்றார்.
Leave a Reply