நாட்டின் பாதுகாப்பு கருதியும், வரி ஏய்ப்பு போன்ற நடவடிக்கைளை தடுப்பதற்காகவும், அதிகாரிகளால் டெலிபோன்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. இதை தவிர்க்க முடியாது.
தொடர்ந்து இந்த நடைமுறை பின்பற்றப்படும். அதே நேரத்தில், டெலிபோன் பேச்சு பதிவுகள், வெளியில் கசியாமல் தடுக்க, தொழில்நுட்ப ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்’ என, பிரதமர் மன்மோகன் சிங் பேசியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் “2ஜி’ ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தற்போது பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வைஷ்ணவி கம்யூனிகேஷன் கார்ப்பரேஷன் தலைவரும், பிரபல நிறுவனங்களின் மக்கள் தொடர்பு ஆலோசகருமான நிரா ராடியா, தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோருடன் டெலிபோனில் பேசிய பதிவுகள், சமீபத்தில் மீடியாக்களில் வெளியாயின. இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, பிரபல தொழில் நிறுவனங்கள் பெரும் கலக்கம் அடைந்தன. விசாரணைக்காக, வரித்துறை அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்ட இந்த டெலிபோன் பேச்சு, மீடியாக்களுக்கு கசிந்தது எப்படி என்பது குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.இந்த விவகாரத்தில் கடும் அதிருப்தி அடைந்த தொழில் அதிபர் ரத்தன் டாடா, “டெலிபோன் டேப்பை மீடியாக்களுக்கு கசியவிட்டவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, வலியுறுத்தினார். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.எச்.டி.எப்.சி., தலைவர் தீபக் பரிக்கும் இதுகுறித்து தனது கவலையை தெரிவித்து இருந்தார்.
அவர் கூறுகையில், “தொழில் அதிபர்களுக்கும், மற்றவர்களுக்கும் இடையே நடக்கும் தனிப்பட்ட முறையிலான டெலிபோன் பேச்சுக்கள், வெளியில் கசிவது சரியான நடவடிக்கை அல்ல. இதுபோன்ற சம்பவங்கள், தொழில் நிறுவனங்களின் தைரியத்தை குலைத்து விடும்’ என்றார்.
இந்நிலையில், டில்லி விஞ்ஞான் பவன் அரங்கில் மத்திய கார்ப்பரேட் நலத் துறை சார்பில் நேற்று நடந்த கருத்தரங்கில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு பேசியதாவது:டெலிபோன் பேச்சுக்களை டேப் செய்வது என்பது நாட்டின் பாதுகாப்புக்காக அரசாங்கம் எடுத்து வரும் வழக்கமான நடவடிக்கை. வரி ஏய்ப்பை தடுக்கும் வகையிலும் டெலிபோன்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு இது அவசியமானதும் கூட. இந்த விஷயத்தில் அரசு உஷாராக செயல்பட வேண்டியுள்ளது.இதுபோல டேப் செய்வதற்கு அரசாங்கத்திற்கு முழு உரிமையும், அதிகாரமும் உள்ளது. இந்த நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும். ஆனாலும், இந்த அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டுவிடக் கூடாது. ஒரு குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு செய்யப்படும் டெலிபோன் டேப் என்பது அரசாங்கத்தின் பாதுகாப்பில் மட்டும்தான் இருந்தாக வேண்டும். அவ்வாறு இல்லாமல் அந்த விவரங்கள் வெளியில் கசியவிடப்படுவதை ஏற்க இயலாது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது.டேப் செய்வதற்கு சட்டரீதியிலான பாதுகாப்பும், விதிமுறைகளும் ஏற்கனவே உள்ளன.
அவற்றை மேலும் பலப்படுத்த வேண்டிய நேரம் வந்துள்ளது. குறிப்பிட்ட வளையத்திற்குள் செய்யப்படும் இந்த விஷயங்கள் எல்லாம் வெளியே கசியக் கூடாது. அவ்வாறு கசியாமல் தடுப்பதற்கு தொழில்நுட்ப ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து மத்திய அமைச்சரவை செயலர் சந்திரசேகரிடம் அறிக்கை தயார் செய்து தரும்படி கேட்டுள்ளேன். டெலிபோன் உரையாடல்களை டேப் செய்வதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் விரிவாக ஆராய்ந்து அது கசியாமல் பார்த்துக் கொள்ளும் வகையில் ஒரு தனி ஒழுங்குமுறை ஏற்படுத்தப்படும். டெலிபோன் உரையாடல்கள் டேப் செய்யப்படும் விஷயத்தில் கம்பெனிகள் துறையைச் சேர்ந்தவர்கள் மத்தியில் சற்று பதட்டம் உள்ளது. இந்த பதட்டத்தை என்னாலும் உணரமுடிகிறது. அவர்களும் ஜனநாயக விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு இயங்கிட வேண்டும். அவ்வாறு இயங்கும் பட்சத்தில் அவர்கள் கவலைப்பட தேவையில்லை.இவ்வாறு மன்மோகன் சிங் பேசினார்.
Leave a Reply