தகுதியான மாணவ, மாணவிகள் அனைவருக்கும் கல்விக் கடன் வழங்க வேண்டும் என்று தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வணிக வங்கிகளின் நிர்வாகம் அதன் கிளை மேலாளர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.
வேலூர் மாவட்டம், குடியாத்தைச் சேர்ந்த ஜி.திவ்யா, ஜி.பிரித்தீ ஆகியோர் சென்னை ஆவடியில் உள்ள வேல்டெக் பொறியியல் கல்லூரியில் படித்து வருகின்றனர். இருவரும் கல்விக் கடன் கோரி குடியாத்தம் கனரா வங்கிக் கிளை மேலாளரை அணுகினார்கள். அதற்கு அவர், அந்தப் பகுதியில் உள்ள மற்ற வங்கிகளில் இருந்து கடன் எதுவும் பெறவில்லை என்பதற்கான தடையின்மை சான்றிதழ் பெற்று வருமாறு கூறினார். அந்த மாணவிகளின் தந்தையும் அதுபோலவே தடையின்மை சான்று வாங்கி வந்து கொடுத்தார்.
குடியாத்தம் இந்தியன் வங்கிக் கிளை மட்டும் அதுபோன்ற சான்றிதழை தரவில்லை. அதற்கு அந்த வங்கி நிர்வாகம், திவ்யா, பிரித்தீ ஆகியோரின் தந்தை கோழிப்பண்ணை வைப்பதற்காக ரூ.3 லட்சத்து 57 ஆயிரம் வாங்கிய கடன் வாங்கியுள்ளார். அந்தத் தொகையில் இன்னும் நிலுவை இருப்பதாக தெரிவித்தது. எனவே, இரண்டு மாணவிகளும் கடன் பெறுவதற்கு தகுதி இல்லை என்று கூறிய குடியாத்தம் கனரா வங்கிக் கிளை மேலாளர், கல்விக் கடனுக்கான விண்ணப்பத்தை கொடுக்க மறுத்துவிட்டார். இதை எதிர்த்து இரண்டு மாணவிகளும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி சுதாகர் இந்த வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பளித்தார். அதன் விவரம் வருமாறு:-
அரசு கொள்கையை தவறாக புரிந்து கொண்டு வங்கி நிர்வாகம் கல்விக் கடன் தர மறுத்துள்ளது. மனிதவள மேம்பாட்டில் கல்விக்குரிய பங்கையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்து செல்வதையும் கருத்தில் கொண்டு தகுதியான மாணவ, மாணவிகளுக்கு குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கும் திட்டத்தை 2001-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. கல்விக் கடன் கோரும்போது, வேறு வங்கிகளில் கல்விக்காக இல்லாமல் வேறு நோக்கத்திற்காக கடன் வாங்கியிருந்தால் அதைக் காரணம் காட்டி கடன் வழங்காமல் இருக்கலாம் என்று சட்டவிதிகளில் சொல்லப்படவில்லை.
அதுபோல மற்ற வங்கிகளில் கடன் வாங்கவில்லை என்பதற்கான தடையின்மை சான்று வாங்கி வரும்படி வற்புறுத்தவும்கூடாது. வேறு எந்த வங்கியிலும் கல்விக் கடன் வாங்கவில்லை என்ற உறுதிமொழியை மட்டும் பெற்றுக் கொண்டு கல்விக் கடன் கொடுக்க வேண்டும் என்று மட்டும் விதிமுறையில் சொல்லப்பட்டு உள்ளது.
கல்விக் கடனை வணிகக் கடனுடன் ஒப்பிடக்கூடாது. கல்விக் கடனைப் பொருத்தவரை ரூ.4 லட்சம் வரை கோரினால் அதற்கு பிணை தேவை இல்லை. தடையின்மை சான்று கேட்பதும் தேவையற்றது. எனவே, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், வணிக வங்கிகளும் தங்களது வங்கிக் கிளை மேலாளர்களுக்கு ஓர் உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
அதில், “தகுதியுள்ள ஏழை மாணவ, மாணவிகள் குறிப்பாக கிராப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு கல்விக் கடனுக்கான விண்ணப்பதைக் கொடுத்து, பெறப்படும் விண்ணப்பத்தை கருணை அடிப்படையில் பரிசீலித்து, உரிய விதிமுறைகள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால் கல்விக் கடன் கொடுக்க வேண்டும்” என்று உத்தரவிட வேண்டும். மனுதாரர்களுக்கு குடியாத்தம் கனரா வங்கிக் கிளை, கல்விக் கடனுக்கான விண்ணப்பதை உடனடியாகக் கொடுத்து, கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.
Leave a Reply