திருவாரூர் : “தமிழகத்தில் படித்து வேலைக்கு பதிவு செய்த நிலையில், 65 லட்சம் பேர் இருந்தும், தகுதியுள்ள இளைஞர்கள் கிடைக்கவில்லை’ என, தனியார் நிறுவன அதிகாரிகள், அரசிடம் தெரிவித்தனர் என, திருவாரூரில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் இயக்குனர் சந்தோஷ் கே மிஸ்ரா கூறினார்.
திருவாரூரில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனர் சந்தோஷ் கே மிஸ்ரா பேசியதாவது:தமிழகத்தில் படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில், 65 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். ஆனால், தொழில் நிறுவனங்கள் தகுதியுள்ள இளைஞர்கள் வேலைக்கு கிடைக்கவில்லை என அரசிடம் முறையிட்டன. அதனால் தான் முகாம்கள் மூலம் தகுதி உள்ள இளைஞர்களை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டது. இத்திட்டத்திற்கு 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து செலவிடப்படுகிறது.
திட்டத்தில் 10ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், இன்ஜினியரிங் போன்ற உயர் வகுப்பு படித்தவர்களும் தேர்வு செய்யப்படுவர். இது தேசிய அளவில் முன்னோடி திட்டமாக உள்ளது. இத்திட்டத்தின் மூலம் இளைஞர்கள் முன்னேற்றமடைந்து நாடு பொருளாதார வளர்ச்சி அடையும். இந்த முகாமில் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்டு தனியார் கம்பெனிகளில் வேலை செய்பவர்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பெயர் நீக்கம் செய்ய மாட்டோம்.இவ்வாறு சந்தோஷ் கே மிஸ்ரா பேசினார்.
Leave a Reply