சென்னை : தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தலை நடத்த வேண்டுமென, தேர்தல் கமிஷன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து கட்சிகளும் வலியுறுத்தின.
இந்திய தேர்தல் கமிஷனின் துணைத் தேர்தல் கமிஷனர் பிரகாஷ் தலைமையில், தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலை நடத்துவதற்கான, அனைத்து கட்சிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கலந்து கொண்டார். இதில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, சட்டசபைத் தேர்தல் தொடர்பான தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
கட்சிகளின் பிரதிநிதிகள் கூறியதாவது:
ஓ.பன்னீர்செல்வம் – அ.தி.மு.க: தமிழகத்தில் ஒரே நாளில் ஓட்டுப்பதிவை நடத்த வேண்டும். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் யாருக்கு ஓட்டுப் போட்டனர் என்பதற்கான அத்தாட்சி கிடைக்க வேண்டும். தேர்தலில் பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும்.
பொன்முடி – தி.மு.க: சமீபத்தில் நடந்த தொழிற்சங்க தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றதால், எதிர்க்கட்சியினர் விரக்தியில் உள்ளனர். இதனால், சட்டசபைத் தேர்தலின் போது வன்முறையில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே, ஓட்டுச்சாவடிகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தொகுதி மறுசீரமைப்புக்கு பின் தேர்தல் நடப்பதால், பல வாக்காளர்களுக்கான ஓட்டுச்சாவடிகள் மாறியிருக்கும். எனவே, அதுபற்றிய விவரங்களை விளம்பரப்படுத்த வேண்டுமென கோரினேன். அதற்கு தேர்தல் அதிகாரிகள், வரும் ஜனவரி 5ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் போது, ஓட்டுச்சாவடி விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றனர். ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றுதல், கள்ள ஓட்டு போடுதல் போன்றவற்றை அ.தி.மு.க.,வினர் தான் செய்வர். தேர்தலை ஒரே கட்டமாக நடத்தினாலும், வேறு விதமாக நடத்தினாலும் தி.மு.க.,வுக்கு எந்த தயக்கமும் இல்லை. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டுமென அனைத்து கட்சிகளும் கோரின. நாங்களும் அதை வலியுறுத்தினோம்.
தமிழிசை சவுந்திரராஜன் – பா.ஜ: குற்றப்பின்னணி உடைய வேட்பாளர்கள் வெற்றி பெறுவதை தடுக்க வேண்டும். தேர்தல் சமயத்தில் கிரிமினல்கள் யாரையும் விடுதலை செய்யக் கூடாது. ஒரே நாளில் தேர்தலை நடத்த வேண்டும்.
வேலு – பா.ம.க: ஓட்டுக்கு பணம், பொருள் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும். ஓட்டுச்சாவடிகளில் மத்திய ரிசர்வ் படை போலீசாரை பயன்படுத்த வேண்டும். ஒரு தொகுதியில், தலைவர்கள் வருகை உட்பட அனைத்து செலவுகளையும் வேட்பாளர் கணக்கில் சேர்க்க வேண்டும். மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் எஸ்.பி.,க்களை அந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கக் கூடாது. யாருக்கு ஓட்டுப் போட்டனர் என்பதற்கான அத்தாட்சி ரசீது, ஓட்டு இயந்திரத்தில் இருந்து கிடைக்கச் செய்ய வேண்டும். போஸ்டர்கள், சுவர் விளம்பரங்கள், டிஜிட்டல் பேனர்கள் போன்றவற்றுக்கு தடை விதிக்க வேண்டும். தேர்தல் கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
ராஜ்மோகன் – இ.கம்யூ: ஒரே நாளில் ஓட்டுப்பதிவை நடத்த வேண்டும். இடைத்தேர்தல்களில் பணப்பட்டுவாடா தொடர்பாக பல்வேறு புகார்கள் அளித்தும் அதை தடுக்க சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுத் தேர்தலிலாவது பணம் கொடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
மகேந்திரன் – மார்க்சிஸ்ட்: வாக்காளர் அடையாள அட்டை உள்ளவர்களை மட்டுமே ஓட்டுப் போட அனுமதிக்க வேண்டும். வேறு ஆவணங்களை அனுமதிக்கக் கூடாது. தற்போது தமிழகத்தில் 93 சதவீதத்துக்கும் மேலாக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கும் விரைவில் அடையாள அட்டை கொடுக்க வேண்டும். தேர்தலை ஒரே நாளில் நடத்த வேண்டும்.
மகேந்திரவர்மன் – பகுஜன் சமாஜ்: தலித் பகுதிகளில் தனி ஓட்டுச்சாவடி அமைக்க வேண்டும். தலித்களை ஓட்டுப்போட விடாமல் ஆதிக்க சக்திகள் தடுக்கின்றன.
Leave a Reply