சென்னை: பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியில் தமிழக சட்டசபையின் அடுத்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 7ம் தேதி தொடங்குகிறது. முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா உரையுடன் கூட்டத் தொடர் தொடங்குகிறது.
கடந்த மார்ச் 13-ந் தேதி பிரதமர் மன்மோகன்சிங் புதிய சட்டசபைக் கட்டடத்தைத் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அதே மாதம் 19-ந் தேதி 2010-2011-ம் ஆண்டுக்கான பட்ஜெட் புதிய சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட் தாக்கல் செய்த 6 நாட்களுக்குப் பிறகு மார்ச் 26-ந் தேதி சட்டசபை மீண்டும் கூடியது. இந்தக் கூட்டத்தொடர் மே மாதம் 14-ந் தேதி வரை 31 நாட்கள் நடைபெற்றது. அதற்கு அடுத்து சட்டமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 8-ந் தேதி கூடி, 5 நாட்கள் நடந்தது.
இந்தக் கூட்டத் தொடரில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் இடஒதுக்கீடு உள்பட 17 சட்டமசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர், சட்டமன்றத்தின் அடுத்த கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஆவுடையப்பன் ஒத்தி வைத்தார்.
அடுத்த ஆண்டு கூடவுள்ள முதல் கூட்டத் தொடர் குறித்து சட்டசபை செயலாளர் மா.செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு ஆளுநர், தமிழக சட்டசபைக் கூட்டத்தை அடுத்த மாதம் (ஜனவரி) 7-ந் தேதி காலை 9.30 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள புதிய சட்டசபை-தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் கூட்டியிருக்கிறார்.
அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா உரையாற்றுகிறார். அதையடுத்து சட்டப்பேரவை அடுத்த நாள் (ஜனவரி 8) சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடும் என்று தெரிவித்துள்ளார் செல்வராஜ்.
ஆளுநர் உரை நிகழ்த்திய பின்னர் சபை ஒத்திவைக்கப்படும். அதையடுத்து சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக் குழு கூடி கூட்டத்தை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது உள்ளிட்டவை குறித்து முடிவு செய்யும்.
8ம் தேதி மீண்டும் சபை கூடியதும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதன் மீது விவாதம் தொடங்கும். விவாதத்தை
எதிர்க்கட்சியினர் தொடங்கி வைப்பார்கள். இறுதியில் முதல்வர் கருணாநிதி பதிலளிப்பார்.
தற்போதைய சட்டசபையின் ஆயுள் காலம் மே மாதத்துடன் முடிவடைகிறது. எனவே அடுத்த ஆண்டு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது. மாறாக இடைக்கால பட்ஜெட்டே தாக்கல் செய்யப்படும்.
ஸ்பெக்ட்ரம் ஊழல், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுடன் எதிர்க்கட்சிகள் காத்திருப்பதால் இந்த கூட்டத் தொடர் பரபரப்பானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
Leave a Reply