டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கிலிருந்து தானாகவே விலகிக் கொண்டார் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ்.
சிபிஐ நடத்தி வரும் விசாரணையை அவர் மேற்பார்வையிட மாட்டார் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஊழல் வழக்கில் சிக்கியவரான பி.ஜே.தாமஸ், எப்படி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை கண்காணிக்க முடியும். மேலும், அவர் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தை நியாயப்படுத்தியும் பேசியுள்ளார்.
தொலைத் தொடர்புத் துறை செயலாளராக தாமஸ் இருந்தபோது, எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் தற்போது விசாரணைக்கு வந்துள்ளன. இந்த நிலையில், இவரை வைத்துக் கொண்டு எப்படி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான வழக்கை நடத்தப் போகிறீர்கள் என்று நேற்று உச்சநீதிமன்றம் கேட்டிருந்தது.
இதனால் தாமஸ் பதவி விலகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தாமஸைக் காப்பாற்றும் வகையில் தற்போது மத்திய அரசு இறங்கியுள்ளது.
இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவில், இந்த வழக்கிலிருந்து (ஸ்பெக்ட்ரம் வழக்கு) தானாகவே முன்வந்து விலகியுள்ளார் தாமஸ். அவர் இந்த வழக்கை மேற்பார்வையிட மாட்டார். இந்த வழக்கை சிபிஐ எப்படி விசாரிக்கிறது என்பதை உச்சநீதிமன்றம் தாராளமாக மேற்பார்வையிடலாம். அதைக் கண்காணிக்கலாம். அதை அரசு வரவேற்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் மூலம் தாமஸ் பதவி விலக மாட்டார் அல்லது அரசு அதை விரும்பவில்லை என்பது தெளிவாகியுள்ளது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் கருத்து குறித்து தாமஸிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, நான் தலைமை கண்காணிப்பு ஆணையராக தொடர்கிறேன். இதற்கு மேல் இதுகுறித்து தெரிவிக்க முடியாது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு உள்ளதால் மேற்கொண்டு பேச விரும்பவில்லை என்றார்.
Leave a Reply