டெல்லி: தமிழக சுற்றுப்பயணத்தின்போது ராகுல் காந்தி பேசியதற்கு உள்நோக்கம் பார்க்கக் கூடாது. திமுகவுடனான காங்கிரஸ் கூட்டணி பலமாகவே உள்ளது, அதில் எந்த மாற்றமும் இல்லை, இது தொடரும் என்று காங்கிரஸ் கட்சி விளக்கியுள்ளது.
தமிழக சுற்றுப்பயணத்தின்போது கட்சி நிர்வாகிகளிடையே ராகுல் காந்தி பேசுகையில், எதிர்காலத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும். அதுகுறித்து நிலவி வரும் சந்தேக மனோபாவத்தை காங்கிரஸார் முதலில் கைவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதனால் திமுகவுடனான கூட்டணியை முறிக்க காங்கிரஸ் தயாராகி வருகிறதோ என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. ஆனால் இதை காங்கிரஸ் உடனடியாக மறுத்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி கூறுகையில், ராகுல் காந்தியின் பேச்சுக்கு உள்நோக்கம் பார்ப்பது தவறு. கட்சியினருக்கு உத்வேகம் அளிக்கக் கூடிய வகையில்தான் பேசினாரே தவிர கூட்டணியை முறிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி சொல்லவில்லை.
காங்கிரஸ் கட்சியினருக்கு ஒரு கொள்கை, இலக்கு இருக்க வேண்டும் என்ற நோக்கில்தான் ராகுல் காந்தி அப்படிப் பேசியுள்ளார். அதற்கும், தமிழக அரசியல் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
தமிழகத்தில் திமுகவுடன் உறவு வைத்துள்ளோம், அது பலமாக உள்ளது, தொடரும் என்றார் திவிவேதி.
Leave a Reply