தெற்கு ரயில்வேயில் காலிப் பணியிடங்கள் ஆறு மாதத்தில் நிரப்பப்படும்’

posted in: மற்றவை | 0

சென்னை : “”தெற்கு ரயில்வேயில் “சி’ மற்றும் “டி’ பிரிவுகளில் காலிப் பணியிடங்கள் ஆறு மாதங்களுக்குள் நிரப்பப்படும்,” என, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தீபக் கிரிஷன் கூறினார்.

காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற தெற்கு ரயில்வே விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு, சென்னையில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்டு, தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக் கிரிஷன் பேசியதாவது: தெற்கு ரயில்வேயில் பணிபுரியும் நான்கு பேர் டில்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளிலும், சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று வந்துள்ளனர். இவர்கள் அடுத்து நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியிலும் கலந்து கொண்டு, தங்கப் பதக்கங்களை வென்று வரவேண்டும். இதற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். போட்டிகளில் சாதனை புரிய வேண்டும். தெற்கு ரயில்வேயில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதில் பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தற்போது ரயில்வேயில் சிக்னல் உள்ளிட்ட பல பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு வழிவகை செய்யும் வகையில், தற்காலிக பதவிகளுக்கு ஊழியர்களை நிரப்ப, அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

தெற்கு ரயில்வேயில், “டி’ மற்றும் “சி’ பிரிவுகளில் 8,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு இதுவரை 4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. 2007ம் ஆண்டு முதல் “டி’ மற்றும் “சி’ பிரிவுகளில் காலிப் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு “சி’ பிரிவில் 2 சதவீத இடங்களும்,”டி’ பிரிவில் 8 சதவீத இடங்களும் ஆறு மாதங்களுக்குள்ளாக நிரப்பப்படும். பணியிட வேலைவாய்ப்பு குறித்து விளம்பரமும் விரைவில் வெளியிடப்பட உள்ளது. கடும் மழையினால் இரணியல்- குழித்துறை இடையே ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால், அந்த வழி போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. இதனால், திருவனந்தபுரம் – நாகர்கோவில் இடையே ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது ரயில் பாதை சீரமைக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே ரயில்கள் வேகம் குறைத்து இயக்கப்படுகின்றன.

ரயில்களில் 90 நாட்கள் வரை பயண முன்பதிவு செய்து கொள்ளும் வசதியால், பண்டிகை காலங்கள், விழா காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு அதிகமாக உள்ளது. இந்நாட்களில் ரயில்களில் பயணிகள் நெருக்கடியைத் தவிர்க்க தேவைக்குகேற்ப முக்கிய நகரங்கள் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வரும் பொங்கல் பண்டிகையை யொட்டி முக்கிய நகரங்கள் இடையே தேவைக்குகேற்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்பட ஆவன செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தீபக் கிரிஷன் கூறினார்.

விளையாட்டு வீரர்களுக்கு பரிசும், பாராட்டும்: தெற்கு ரயில்வேயில் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் நாகர்கோவிலில் சீனியர் டிக்கெட் பரிசோதகராக பணிபுரியும் ஜோசப் ஆப்ரகாம், சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றார். பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் சீனியர் கிளார்க்காக பணிபுரியும் பிரிஜா ஸ்ரீதரன், ஆசிய விளையாட்டு போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கமும், 5,000 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்றார். எர்ணாகுளத்தில் சீனியர் டிக்கெட் பரிசோதகராக பணிபுரியும் சினிஜோஸ், காமன்வெல்த் போட்டியில் 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் பெற்றார். திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் கொல்லத்தில் சீனியர் டிக்கெட் பரிசோதகராக பணிபுரியும் பிரியா, காமன்வெல்த் போட்டியில் 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இந்த நால்வருக்கும், டில்லியில் ரயில்வே அமைச்சகம் மூலமும் முன்பு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. இவர்கள் நால்வரும் தெற்கு ரயில்வேயில் பணிபுரிவதால், இம்மண்டலம் மூலம் நேற்று சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டு, நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழும் பொதுமேலாளர் மூலம் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *