தெ. ஆப்பிரிக்காவில் சச்சின் புதிய வரலாறு-50வது டெஸ்ட் சதம் போட்டார்

செஞ்சுரியன்: இந்திய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர் நேற்று புதிய வரலாறு படைத்தார். செஞ்சுரியன் மைதானத்தில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் மிக அருமையாக ஆடி தனது 50வது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்து புதிய சாதனை படைத்தார்.

டெஸ்ட் வரலாற்றில் ஒரு வீரர் எடுக்கும் முதலாவது 50வது சதமாகும் இது. இந்த வகையில் சச்சின் புதிய வரலாறு படைத்துள்ளார். இது சச்சினுக்கு 175வது டெஸ்ட் போட்டியாகும்.

மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் இந்தப் போட்டியில் இந்தியா இருக்கும் நிலையில் சச்சின் தனது அனுபவத்தைக் கொண்டு திறம்பட ஆடி இந்தியாவின் ஸ்கோரை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல் அபாரமான சதத்தையும் போட்டார்.

இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 50 சதம் போட்ட முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் படைத்தார்.

சச்சின் சதமடித்ததும் ஒட்டுமொத்த ஸ்டேடியத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி சச்சினைப் பாராட்டினர். தென் ஆப்பிரிக்க வீரர்களும் சச்சினின் சதத்தை வரவேற்றனர்.

மொத்தம் 197 பந்துகளைச் சந்தித்து தனது சதத்தை பூர்த்தி செய்தார் சச்சின். இதில் 12 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடக்கம்.

நேற்றைய போட்டியின் இறுதியில், இந்தியா தனது 2வது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 454 ரன்கள் எடுத்திருந்தது. மீதமுள்ள 2 விக்கெட்களையும் வீழ்த்தினால் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி பெறும். மாறாக இந்தியா இன்னும் 30 ரன்களை எடுத்து விட்டால், தென் ஆப்பிரிக்காவை மீண்டும் பேட் செய்ய வைக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *