தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
ஜனவரி 9-ந்தேதி தே.மு.தி.க. சார்பில் சிறப்பான மாநாட்டினை சேலத்தில் நடத்த தீர்மானித்துள்ளோம்
அதன்படி கழக நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர், இளைஞர் அணியினர் உட்பட கழகத்தைச்சேர்ந்த பல அணியினரும் முழு முயற்சியில் ஈடுபட்டிருப்பீர்கள் என்பதை உணர்கிறேன்.
சேலத்தில் நாம் நடத்தவுள்ள சிறப்பு மாநாடு வருகிற 2011ஆம் ஆண்டு ஜனவரி 9-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு 2005ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதியில் மதுரையில் ஒரு மாபெரும் மாநாட்டை கழகத்தை துவக்குவதற்காக நடத்திக்காட்டி லட்சோப லட்சம் மக்கள் கலந்து கொண்டனரோ, அதை மிஞ்சும் அளவுக்கு இந்த மாநாடும் அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
அன்றும் சில மாதங்களிலேயே நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால் அந்த மாநாடு நடைபெற்றது. இன்றும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல்களை சந்திக்கவுள்ள சூழ்நிலையிலேயே இந்த மாநாடும் நடைபெறவுள்ளது. எவ்வாறு அன்றைய தினம் கழகம் துவங்கிய பொழுதே மாபெரும் சக்தியாக உருவெடுக்க அந்த மாநாடு வழி வகுத்ததோ, அது போல இந்த மாநாடும் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் தே.மு.தி.க. ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்று விரும்புகின்றேன்.
தே.மு.தி.க. மாநாடு தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் மட்டுமல்ல, உலகமெங்கும் உள்ள தமிழர்களின் நெஞ்சிலும் நீங்காத இடம் பெறத்தக்க வகையில் ஒரு வரலாறு படைக்க வேண்டும். அதற்காக இன்று முதலே கழகத்தோழர்கள் அனைவரும் ஓயாது உழைத்து, அனைவரையும் குடும்பத்தோடு அழைத்து வர அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுகிறேன்.
ஒரு சிலர் பெரும் பணக்காரர்களாகவும், மிகப் பலர் பரம ஏழைகளாகவும் உள்ள ஏற்றத்தாழ்வு நாள் தோறும் பெருகி வருகிறது. தே.மு.தி.க. இன்று அத்தகைய ஏற்றத்தாழ்வை போக்கும் ஒரு புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது.
ஊழலை ஒழிப்போம், வறுமையை ஒழிப்போம் என்ற உன்னத இலட்சியத்தை மக்கள் முன் வைத்து ஏழைகளே இல்லாத நாடு, எங்கள் நாடு என்ற வகையில் தமிழ்நாட்டை முன் எடுத்துச் செல்வோம் என்ற சூளுரையை நாம் மேற்கொண்டுள்ளோம்.
நமது லட்சியப்பாதையில் நாம் வெற்றியடைய இந்த மாநாடு வழி வகுக்க வேண்டும். எத்தகைய சூழலிலும் மக்கள் நமக்கு ஆதரவினை தொடர்ந்து அளித்து வளர்த்து வருகிறார்கள் என்பதில் இருந்தே நம்முடைய தொலைநோக்கு திட்டத்துக்கு தமிழ்நாடு தயாராகி விட்டது என்று தெரிகிறது. வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தல்களில் தே.மு.தி.க. எத்தகைய வியூகம் அமைக்கும், எப்படிப்பட்ட அரசியல் நிலையை எடுக்கும் என்பவன எல்லாம் சேலத்தில் நடக்க உள்ள மாநாடு தமிழ் உலகுக்கு தெளிவுபடுத்த உள்ளது. ஆகவே வீடுதோறும் நம் மாநாடு பற்றிய செய்தியைக் கூறி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி மாநாட்டிற்கு மக்களை அழைத்து வாரீர் என்று எனது உயிரினும் மேலான தமிழ் நெஞ்சங்களை கேட்டுக்கொள்ளுகிறேன்.
மலர் பறிக்க செல்கிற போது மழை பெய்கிறது என்றால், குடைப் பிடித்துதான் ஆக வேண்டும். அதுபோல மாநாட்டு பணிகள் நமக்கு நிறைய இருந்தாலும், இதற்கிடையில் மழை வெள்ளத்தால் தமிழ்நாட்டில் பல மாவட்டங்கள் பெரும் உயிர் சேதத்திற்கும், பொருள் சேதத்திற்கும் ஆளாகி உள்ளன. பெரும்பாலான மக்கள் வீடு இழந்து உண்ண உணவின்றி வீதியில் நிற்கின்றனர். விவசாயிகள் பாடுபட்ட பயிர்களை வெள்ளம் அழித்து விட்டதால் வேதனையில் துடிக்கின்றனர். ஆறுகள், குளங்கள், கால்வாய்கள், சாலைகள் என அனைத்தும் பாழ்பட்டு உள்ளன. குறிப்பாக கடலோர மாவட்டங்களான கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், விழுப்புரம், நெல்லை, இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை போன்ற மாவட்டங்கள் பேரிழப்புக்கு ஆளாகி உள்ளன. தி.மு.கழக அரசு வெள்ள நிவாரண பணியில் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகிறேன்.
இந்த சூழ்நிலையில் நமது இயக்கத்தைச்சார்ந்த தோழர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச்சென்று தங்களால் இயன்ற அளவு உதவிகைள செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். வழக்கம்போல் இத்தகைய பணிகளில் ஈடுபடும்போது நாம் வழங்கும் இலவச அரிசி, துணிமணிகள், விவசாயிகளுக்கு உபகரணங்கள் போன்றவற்றை தாராளமாக உதவிட கேட்டுக்கொள்ளுகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
1 1
Leave a Reply