பள்ளிகளில் தொழில்முறை படிப்புகளுக்கென்று ஒரு தனி சி.பி.எஸ்.இ. வாரியம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.
உயர்கல்வியை முடிக்கமுடியாத மாணவர்கள் மற்றும் சாதாரண பள்ளி கல்வியில் நாட்டமில்லாத மாணவர்கள் ஆகியோரின் முன்னேற்றத்திற்காகவும், தொழில்துறை நிபுணர்களுக்காக நாட்டில் நிலவும் பற்றாக்குறையை போக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதற்கான திட்ட வடிவமைப்பு அடுத்தாண்டு மத்தியில் நிறைவடையும் என்று அமைச்சர் கூறினாலும், தொழிற்கல்விக்கான தனி சி.பி.எஸ்.இ. வாரியம் எப்போது அமைக்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளிக்கவில்லை.
மேலும் அவர், “இந்த திட்டத்தின்படி, தொழில்முறை பயிற்சியானது 8 ஆம் வகுப்பிலிருந்து ஆரம்பமாகி, 12 ஆம் வகுப்பு வரை தொடரும். தச்சுவேலை பயிற்சி முதல் பாரா-மெடிக்கல் பயிற்சி வரையும், சமையல்கலை பயிற்சியிலிருந்து ஆட்டோமொபைல் பயிற்சி வரையும் பலவகைப்பட்ட பயிற்சி திட்டங்கள் இருப்பதால், மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான துறைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இந்த பயிற்சி திட்டம் 10 நிலைகளில் செயல்படுத்தப்படும்.
நமது கல்வித்திட்டத்தை செம்மைப்படுத்தவே இதுபோன்ற புதுமையான திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. பெருகிவரும் மக்கள்தொகையின் வேலைவாய்ப்பு அவசியத்தை நிறைவு செய்ய நமக்கு இதுபோன்ற திட்டங்கள் அவசியம். மேலும் பல்கலைக்கழகங்கள், பள்ளி நிலையில் பயிற்சி பெற்றுவரும் மாணவர்களை, இளநிலை அளவில் தேர்ச்சிபெற்றவர்களாக ஆக்க வேண்டும்” என்றும் கூறினார்.
Leave a Reply