மும்பை : பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் நூரானிக்கு கொடுக்க வேண்டிய தொகைக்கு பதில் சொத்துக்களை பறிமுதல் செய்யும்படி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதனால், நடிகர் சஞ்சய் தத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. தன்னிடம் இருந்து பணத்தை வசூல் செய்வதற்காக நூரானி, கூலிப் படையை ஏவி மிரட்டினார் என சஞ்சய் தத், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 2002ம் ஆண்டு ஷகீல் நூரானி, “ஜான் கீ பாஜி’ என்ற படத்தில் கதாநாயகனாக சஞ்சய் தத்தை நடிக்க ஒப்பந்தம் செய்து 50 லட்ச ரூபாய் கொடுத்திருந்தார். ஆனால், இந்த படத்தில் சஞ்சய் தத் நடிக்கவில்லை. ஒப்பந்தப்படி சஞ்சய் தத் இந்த படத்தில் நடிக்காத காரணத்தால் தனக்கு இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த பணத்தை அவரிடமிருந்து பெற்றுத் தரும்படி திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில்(இம்பா) நூரானி புகார் செய்திருந்தார். இது தொடர்பாக, இம்பா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டும் சஞ்சய் தத் வரவில்லை. எனவே, அவரது சொத்துக்களை ஜப்தி செய்து பணத்தை வசூலித்து தரும்படி இம்பா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட், சஞ்சய் தத்தின் வீடு மற்றும் அலுவலகத்தை ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து, மும்பையில் சஞ்சய் தத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே சஞ்சய் தத், மும்பை ஐகோர்ட்டில் இரண்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளார். தன்னிடமிருந்து பணத்தை வசூல் செய்வதற்காக நூரானி கூலிப்படையை ஏவி கடந்த 2008ம் ஆண்டு மிரட்டினார் என்றும், ஐகோர்ட் ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ள வீடு மற்றும் அலுவலகம் தன் மனைவி மான்யதாவுக்கு சொந்தமானவை என்றும் மனுவில் கூறியுள்ளார். இது குறித்து நூரானி குறிப்பிடுகையில், “பணம் கேட்டு நச்சரித்தால் என்னை சுட்டுக் கொன்று விடுவதாக சஞ்சய் தத் மிரட்டினார். நான் அவரை மிரட்டியதாக கூறுவது அபத்தமானது. சஞ்சய் தத்துக்கு இன்னும் நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பு உள்ளது’ என தெரிவித்துள்ளார்.
Leave a Reply