ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கேட்டு தெலுங்கு தேசம் கட்சி தலைவர் 8 நாள் தொடர் உண்ணாவிரதம் இருந்தார்.
அடுத்த கட்டமாக குண்டூரில் நேற்று விவசாயிகளுக்காக மாபெரும் பொதுக் கூட்டம் நடத்தினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் பிரகாஷ் காரத், மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவேகவுடா, அரியானா முன்னாள் முதல்-மந்திரி ஓம்பிரகாஷ் சவுதாலா மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து லட்சக் கணக்கான தொண்டர்களும் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:-
காங்கிரஸ் அரசு விவசாயிகள் பிரச்சினை பற்றி கண்டு கொள்ளவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்காக தனி பட்ஜெட் போட்டு நிதி ஒதுக்கீடு செய்வோம். மத்தியிலும் மாநிலத்திலும் விவசாயிகளுக்கு அனைத்து வரிகளையும் நீக்கச் செய்வோம்.
விவசாயிகளுக்கு கடன் கொடுத்து அடையாள அட்டை வழங்குவோம். மழை வெள்ளத்தால் பயிர் நாசம் அடைந்தால் செலவழித்த முழுத் தொகையும் கிடைக்கும் வகையில் பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் திட்டத்தை செயல் படுத்துவோம்.
இப்போது நெல் பயிர்களை பயிர் செய்ய ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் செலவாகிறது. ஆனால் அவர்களுக்கு அந்த தொகை கிடைப்பதில்லை. பயிர் நாசம் அடைந்த விவசாயிகளுக்கு ரூ. 2500 அரசு கொடுக்கிறது. ரூ. 10 ஆயிரம் கூட கொடுப்பதில்லை.
மிளகாய் பயிர் செய்ய ஏக்கருக்கு ரூ. 70 ஆயிரம் செலவாகிறது. காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கு எதிராக உள்ளது.
விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்படுகிறார் கள். சாதாரண மக்கள் காய்கறி வாங்க முடிய வில்லை. வெங்காயம் கிலோ ரூ. 70க்கு விற்கிறது. ஆனால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு குறைந்த தொகையே கிடைக்கிறது. இடைத்தரகர்கள்தான் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள்.
பருத்தி வெளிநாடுகளுக்கு ரூ. 8 ஆயிரத்துக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு ரூ. 3 ஆயிரம் தான் கிடைக்கிறது. விவசாயிகளுக்காக காங்கிரஸ் போராட வில்லை.
தெலுங்கானா பிரச்சினைக்காக போராடிய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதம் இருந்தனர். ஒரே நாளில் வழக்குகள் வாபஸ் பெறப்பட்டது.
அதே போன்று விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ஏன் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.
Leave a Reply