நாட்டின் சொத்தை அடிமாட்டு விலைக்கு தாரைவார்த்துள்ளார் ராசா-ஜெ

posted in: அரசியல் | 0

சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், பாரதப் பிரதமரின் அறிவுரையை மீறி, நிதி அமைச்சகத்தின் அறிவுரையை மீறி, சட்ட அமைச்சகத்தின் அறிவுரையை மீறி, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் அறிவுரையை முற்றிலும் புறக்கணித்து, எந்த கொள்கையையும் கடைபிடிக்காமல், அனைத்து விதிமுறைகளையும் காற்றில் பறக்கவிட்டு, தன்னிச்சையாக நாட்டின் சொத்தை அடி மாட்டு விலைக்கு தாரை வார்த்து இருக்கிறார் ராசா என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

’2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில், பாரதப் பிரதமரின் அறிவுரையை மீறி, நிதி அமைச்சகத்தின் அறிவுரையை மீறி, சட்ட அமைச்சகத்தின் அறிவுரையை மீறி, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் அறிவுரையை முற்றிலும் புறக்கணித்து, எந்த கொள்கையையும் கடைபிடிக்காமல், அனைத்து விதிமுறைகளையும் காற்றில் பறக்கவிட்டு, தன்னிச்சையாக நாட்டின் சொத்தை அடி மாட்டு விலைக்கு தாரை வார்த்து இருக்கிறார் ராசா.

இதன் விளைவாக, இந்த ஸ்பெக்ட்ரம் உரிமத்தைப் பெற்ற நிறுவனங்கள் எல்லாம் ஒரு சில மாதங்களில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டிவிட்டன. ஆனால், உரிமத்தை கொடுத்த மத்திய அரசுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் உரிமத்தைப் பெற்ற நிறுவனங்களில் பெரும்பாலான நிறுவனங்கள், அந்தத் துறையில் அனுபவம் இல்லாத, லெட்டர் பேடு நிறுவனங்கள். இந்த ஊழலின் மூலம் மத்திய அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 379 கோடி ரூபாய் என்று இந்திய கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி கணக்கிட்டு இருக்கிறார்.

இந்த இமாலய ஊழலில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகளை வெளிக்கொணர வேண்டும் என்ற நோக்கத்தில், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

எனவே, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட கோரி, திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்டக்கழகங்களின் சார்பில், நாளை அன்று காலை 10.30 மணி அளவில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *