உலகிலேயே மிகவும் விலை குறைவான கார் மற்றும் சிறிய கார் என்ற பெருமையுடன் அறிமுகமான நானோ கார் தற்போது பெரும் வீழ்ச்சியை சந்திக்க ஆரம்பித்துள்ளது.
இதனால் கவலை அடைந்துள்ள ரத்தன் டாடா நானோ விற்பனையாளர்களை சந்தித்து பேசவுள்ளார்.
டாடா குழுமம் எதிர்பாராத வகையில், நானோக்களின் விற்பனை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு ஜூலை மாதம் 9000 கார்கள் விற்பனையாகின. ஆனால் இந்த ஆண்டு ஜூலையில் வெறும் 509 கார்கள் மட்டுமே போணியாகியுள்ளது. இது டாடாவை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
இதையடுத்து டாடா நானோ கார்களின் விற்பனையாளர் கூட்டத்திற்கு ரத்தன் டாடா ஏற்பாடு செய்துள்ளார். அப்போது விற்பனையாளர்களுடன் டாடா பேசவுள்ளார். நிலைமையின் ஆழம் குறித்து அப்போது பேசி அறியவுள்ளார். விற்பனையை கூட்டுவது தொடர்பான உத்திகள் குறித்தும் அவர் விற்பனையாளர்களிடம் பேசத் திட்டமிட்டுள்ளார்.
தற்போது நாள் ஒன்றுக்கு 175 கார்கள் என்ற வீதத்தில் நானோ கார்கள் தயாரிக்கப்படுகின்றன. இதை அதிகரிக்க ரத்தன் விரும்புகிறார். ஆனால் நானோ கார்களின் விற்பனை சரிவைச் சந்தித்துள்ளதால் ரத்தன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
நானோ கார் அறிமுகப்படுத்தப்பட்ட புதிதில், அக் கார்களுக்கு மிகப் பெரிய அளவில் கிராக்கி இருந்தது. இதை டாடா மோட்டார்ஸே எதிர்பார்க்கவில்லை. இதையடுத்து கார்களை வழங்குவதில் குலுக்கல் முறையை அது கடைப்பிடித்தது. ஆனால் இப்போது நானோ கார்களுக்கான கிராக்கி பெருமளவில் குறைந்து போயிருப்பது டாடா மோட்டார்ஸை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
நானோ கார்களை மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் தயாரிக்க முதலில் டாடா நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால் அங்கு மமதா பானர்ஜி ரூபத்தில் பெரும் பிரச்சினை எழவே சிங்கூரை கைவிட்டு விட்டு குஜராத் மாநிலம் சனந்த் பகுதிக்கு இடம் மாறியது டாடா. இதன் மூலம் நானோ தயாரிப்பை விரைவுபடுத்தியது நானோ நிறுவனம். மேலும், சமீபத்தில் நேரடி விற்பனை மையத்தையும் டாடா நிறுவனம் தொடங்கியது. இதன் மூலம் குலுக்கலுக்காக காத்திருக்காமல் நேரடியாக வாங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது.
இப்படி பல ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் நானோ சரிவைக் கண்டிருப்பது டாடாவை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. டாடா மட்டுமல்லாமல் நானோ டீலர்களும் கூட ஏமாற்றமடைந்துள்ளனர்.
டாடா நானோ கார்களில் சமீபத்தில் அடுத்தடுத்து எலக்ட்ரிக் சப்ளை சிஸ்டத்தில் பிரச்சினை ஏற்பட்டு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன. இதுவே நானோ கார்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.
Leave a Reply