அரூர் : “”நீதிமன்றம் மீது சாதாரண குடிமகனுக்கும் நம்பிக்கை வரும் வகையில், நீதிபதிகள் நீதியின் குரலாக இருக்க வேண்டும், ” என, தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
தர்மபுரி அடுத்த, அரூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற கட்டடம் ஒரு கோடியே 48 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று அரூரில் நடந்தது. தர்மபுரி மாவட்ட நீதிபதி குமர குரு தலைமை வகித்தார். சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் பழனிவேல், பானுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சட்ட அமைச்சர் துரைமுருகன் புதிய நீதிமன்ற கட்டடங்களை திறந்து வைத்து பேசியதாவது: தி.மு.க., ஆட்சியில் 300 கோடி ரூபாய்க்கு நீதிமன்றங்களுக்கு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. பென்னாகரம் நீதிமன்றத்திற்கு புது கட்டடம் கட்டுவதற்கு, ஒரு கோடியே 53 லட்சம் ரூபாயும், பாலக்கோடு நீதிமன்றத்திற்கு 3 கோடியே 29 லட்சம் ரூபாயில் கட்டடம் கட்டுவதற்கும் உயர் நீதிமன்றத்தின் நிர்வாக அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. தர்மபுரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கொண்டு வரப்படும். பாப்பிரெட்டிப்பட்டியில் விரைவில் நீதிமன்ற கட்டடம் கட்டப்பட உள்ளது. இங்கு நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்கு கலெக்டர் உடனடியாக நிலம் பெற்று தர வேண்டும்.
கடந்த ஆட்சியில் நீதி துறைக்கு வெறும் 23 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தி.மு.க., ஆட்சி வந்த பின் 2006-07ம் ஆண்டில் பண்ருட்டி, வேடசந்தூர், பெரம்பூர் ஆகிய இடங்களில் நீதிமன்ற கட்டடங்கள் கட்டுவதற்கு 13 கோடி ரூபாயும், 2007-08ம் ஆண்டில் 19 இடங்களில் நீதிமன்ற கட்டடங்கள் கட்டுவதற்கு 109 கோடி ரூபாயும், 2008-09ம் ஆண்டில் ஐந்து இடங்களில் நீதிமன்ற கட்டடங்கள் கட்டுவதற்கு 71 கோடி ரூபாயும், 2009-10ம் ஆண்டில் 25 கோடி ரூபாயும், 2010-11ம் ஆண்டில் 5 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 116 புதிய நீதிமன்றங்கள் துவங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் வழக்குகளை விரைந்து முடிக்க நீதிபதிகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் மீது சாதாரண குடிமகனுக்கும் நம்பிக்கை வரும் வகையில், நீதியின் குரலாக நீதிபதிகள் இருக்க வேண்டும். நீதிபதிகள் வழக்குகளை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு உதவ வேண்டும். வக்கீல்கள் அடிக்கடி நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும். நீதிமன்ற விழாக்களில் எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி., க்களை அமர வைப்பதற்கு நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு துரைமுருகன் பேசினார்.
Leave a Reply