பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக இருக்கும்: மீரா குமார் நம்பிக்கை

posted in: அரசியல் | 0

புதுடில்லி : “எந்தவிதமான சிக்கலும் இன்றி, பார்லிமென்டில் பட்ஜெட் கூட்டத் தொடர் சுமுகமாக நடக்கும்’ என, சபாநாயகர் மீரா குமார் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

இருப்பினும், “2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க, பார்லிமென்ட் கூட்டுக் குழு (ஜே.பி.சி.,) விசாரணைக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியுடன் இருப்பதாக பா.ஜ., தெரிவித்துள்ளது.

“2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, தொலைத் தொடர்பு அமைச்சர் ராஜா தன் பதவியை ராஜினாமா செய்தார். இந்த விவகாரத்தில் பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என, பா.ஜ., – கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதற்கு காங்., மறுத்துவிட்டதால், பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர், எந்தவிதமான விவாதங்களும் இன்றி முடிந்தது. ஜே.பி.சி., விசாரணைக்கு உத்தரவிடப்படாத நிலையில், வரும் பிப்ரவரியில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரையும் நடத்த விடாமல் செய்து விடுவோம் என எதிர்க்கட்சிகள், மத்திய அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றன.

இந்நிலையில், “2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு குறித்து விவாதிக்க பார்லிமென்டில் சிறப்பு கூட்டத்தைக் கூட்டலாம் என, காங்., மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த சில தினங்களுக்கு முன் யோசனை தெரிவித்தார். இதையும் எதிர்க்கட்சிகள் நிராகரித்தன. மேலும், பொது கணக்கு குழுவிற்கு “2ஜி’ முறைகேட்டை முழுவதுமாக ஆராயும் அதிகாரம் இல்லை என்பதால், ஜே.பி.சி., விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என, பா.ஜ., திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இந்த சூழலில், லோக்சபா சபாநாயகர் மீரா குமார் நேற்று, லோக்சபா தலைவர் பிரணாப் முகர்ஜி எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், மூத்த தலைவர் அத்வானி, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பன்சால், இணையமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். குளிர்கால கூட்டத்தொடரைப் போல், பட்ஜெட் கூட்டத் தொடரும் எந்தவிதமான விவாதங்களுமின்றி முடங்கிவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டே இந்த சந்திப்பு நடைபெற்றதாக அவர் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் பேசியதில், பட்ஜெட் கூட்டத்தொடரை எந்தவிதமான சிக்கலும் இன்றி நடத்திச் செல்லலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினருமே அவையை சுமுகமாக நடத்திச் செல்ல உறுதி அளித்துள்ளனர். நாம் மிகவும் பக்குவப்பட்ட ஜனநாயக நாட்டில் வாழ்ந்து வருகிறோம். இதில் சில மேடு, பள்ளங்கள் இருக்கலாம். சிலர் எதிர்க்கட்சியாக இருக்கலாம், சிலர் ஆளும் கட்சியாகவும், இன்னும் சிலர் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். ஆனால், அவர்கள் எல்லாம், பட்ஜெட் கூட்டத்தொடரை எந்தவிதமான சிக்கலும் இன்றி வழிநடத்திச் செல்ல தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். அவர்களது இந்த வாக்குறுதி மூலம், இப்போது எழுந்துள்ள பிரச்னைக்கு ஒரு பொதுவான தீர்வு காணப்படும் என நம்புகிறேன். குளிர்கால கூட்டத் தொடர் எந்தவிதமான விவாதங்களும் இன்றி முடிந்தது மிகுந்த வருத்தத்தை தருகிறது. இவ்வாறு சபாநாயகர் மீரா குமார் கூறினார். இதற்கிடையே, “2ஜி’ விவகாரத்தில் ஜே.பி.சி., விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் தாங்கள் மிகவும் உறுதியாக இருப்பதாக, பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *