புதுடில்லி : “உங்களின் நியமனத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது’ எனக் கேட்டு, மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே.தாமசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் கடந்த செப்டம்பரில் நியமிக்கப்பட்டார். பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிதம்பரம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகிய மூன்று பேர் அடங்கிய குழு இவரை நியமித்தது. இருந்தாலும், தாமசின் நியமனத்திற்கு சுஷ்மா சுவராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஜனாதிபதியிடமும் இதுபற்றி புகார் தெரிவித்தார். ஆனாலும், பெரும்பான்மை முடிவு என்ற அடிப்படையில், தாமஸ் நியமனம் உறுதி செய்யப்பட்டது.தாமஸ் நியமனத்தை எதிர்த்து பொதுநல அமைப்பு ஒன்றும், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் லிங்டோவும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அவர்கள் கூறியிருந்ததாவது:எதிர்க்கட்சி தலைவரான சுஷ்மா சுவராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையராக தாமஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தாமஸ் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை என்பதால், அவரை மிக முக்கியமான இந்தப் பதவிக்கு பரிசீலித்திருக்கக் கூடாது. ஏனெனில், கேரளாவில் நடந்த பாமாயில் ஊழல் வழக்கில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.மேலும், “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி நிகழ்ந்த போதும், தொலைத்தொடர்பு துறை செயலராக தாமஸ் இருந்துள்ளார். ஸ்பெக்ட்ரம் மோசடியை மூடி மறைக்கவும் அவர் முற்பட்டுள்ளார். எனவே, தாமஸ் நியமனத்தை சட்ட விரோதமென அறிவிக்க வேண்டும்.இவ்வாறு மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த மனுக்கள் கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, “கிரிமினல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தாமஸ், எப்படி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையராக திறம்பட செயல்பட முடியும். உங்களின் நேர்மை குறித்து யாரேனும் கேள்வி எழுப்ப மாட்டார்களா?’ என, நீதிபதிகள் கேட்டனர்.அடுத்த விசாரணை: இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் தலைமை நீதிபதி கபாடியா, நீதிபதிகள் ராதா கிருஷ்ணன் மற்றும் சுவாதந்தர் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் கூறியதாவது:தாமஸ் நியமனம் தொடர்பான பைல்களை ஆய்வு செய்தோம். அவரின் நியமனத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது எனக் கேட்டு, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். அத்துடன் மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜனவரி 27ம் தேதி நடைபெறும். அதற்குள் சம்பந்தப்பட்டவர்கள் பதில் மனு தாக்கல் செய்வது, அதற்கு வழக்கு தொடர்ந்தவர்கள் பதில் அளிப்பது உட்பட அனைத்து விவகாரங்களும் முடிவடைய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உடன் அட்டர்னி ஜெனரல் வாகன்வதி, மத்திய அரசுக்கான நோட்டீசை தான் பெற்றுக் கொள்வதாகவும், தாமசுக்கான நோட்டீசை பெற முடியாது என்றும் கூறினார். அத்துடன் நோட்டீசுக்கு பதில் அளிக்க ஆறு வார கால அவகாசம் தர வேண்டும் என்றும் கோரினார். அப்போது பொதுநல அமைப்பு சார்பில் ஆஜரான வக்கீல் பிரசாந்த் பூஷண் கூறுகையில், “பிரதிவாதிகள் அனைவருக்குமான நோட்டீசை சட்ட அதிகாரி ஏற்றுக் கொள்ளலாம்’ என்றார்.
Leave a Reply