பிரதமர் மன்மோகன்சிங்குக்கு, முதல்- அமைச்சர் கருணாநிதி ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
பருத்தி பிரச்சினை தொடர்பாக நான் ஏற்கனவே 23-9-2010 அன்று தங்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தேன். வெளிநாடுகளுக்கு பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதிப்பதற்கு முன்பு உள்நாட்டு தேவைக்கு போதிய பருத்தி கிடைக்க உத்தரவாதம் அளிக்க வேண்டும் என கூறி இருந்தேன்.
நவம்பர் 1-ந்தேதி 55 லட்சம் பேல் பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன் காரணமாக பருத்தி விலை உயர்ந்தது.
கடந்த செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் இருந்து நவம்பர் மாதம் கடைசி வாரத்துக்குள் மட்டும் 20 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. ஏற்றுமதியாளர்கள் பருத்திகளை அதிக அளவில் கொள்முதல் செய்ததால் உள்நாட்டு தேவைக்கு போதிய பருத்தி கிடைக்கவில்லை.
பொதுவாக அக்டோபர் மாதத்துக்கு பிறகு உள்ள 4-5 மாதங்களில் புதிய பருத்திகள் சந்தைக்கு வருவதால் விலை குறையும். ஆனால் இந்த ஆண்டு 55 லட்சம் பேல் பருத்தி ஏற்றுமதியால் நிலைமை எதிர்மறையாகிவிட்டது. போதிய பருத்தி கிடைக்க வில்லை. தேவை யான இருப்பும் வைக்கப்படவில்லை.
நமது போட்டியாளரான சீனா 33 சதவீத பருத்திகளை இருப்பு வைத்து உள்ளது. ஆனால் நமது நாட்டில் 17 சதவீத இருப்புதான் உள்ளது. இந்த கால கட்டங்களில் அதிக அளவு இருப்பு வைக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.
நமது நாட்டில் விவசாய தொழிலுக்கு அடுத்த படியாக ஜவுளி துறையில் தான் அதிக வேலை வாய்ப்பு உள்ளது. இதற்கு தேவையான மூலப் பொருட்கள் இருந்தால்தான் அதை தக்க வைக்க முடியும்.
கைத்தறி மற்றும் விசைத்தறி மூலம் மட்டும் தமிழ்நாட்டில் 50 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.
எனவே பருத்தி ஏற்று மதியை உடனடியாக ரத்து செய்து உள்நாட்டு தேவைக்கு போதிய பருத்தி கிடைக்கவும், விலை குறைவாக கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
பருத்தி விலை உயர்வால் பருத்தி நூல் விலையும் உயர்ந்துவிட்டது. அதிக அளவில் பருத்தி நூல் ஏற்றுமதியால் நெசவுகூடங்களுக்கு போதிய நூல் கிடைக்கவில்லை. இதனால் விசைத்தறி, கைத்தறி கூடங்கள், பின்னல் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே நூல் ஏற்றுமதிக்கு உச்சவரம்பு வைத்து கட்டுப்படுத்த வேண்டும். மேலும் நூல் ஏற்றுமதிக்கு வரியும் விதிக்க வேண்டும்.
இதன் மூலம் பருத்தி, பருத்தி நூல்கள் உள்நாட்டு தேவைக்கு போதிய அளவு கிடைக்க வழிசெய்ய வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறி உள்ளார்.
Leave a Reply