மெல்போர்ன்: கிரிக்கெட் உலகின் சிறந்த வீரராக “சாதனை நாயகன்’ சச்சின் தேர்வு செய்யப்பட்டார். இதற்காக நடந்த கருத்துக் கணிப்பில் இவர், ஜாம்பவான் பிராட்மேனை முந்தினார். சச்சின் 67 சதவீத ஓட்டுகளை பெற்றார். பிராட்மேனுக்கு 33 சதவீத ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன.
கிரிக்கெட் அரங்கின் சிறந்த வீரர் இந்திய அணியின் “மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சினா அல்லது பிராட்மேனா என்ற வாதம் அவ்வப்போது எழுப்பப்படும். ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேன், டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுள்ளார். இவர் 52 போட்டியில் 29 சதம் உட்பட 6996 ரன் (99.94 சராசரி) எடுத்துள்ளார். ஆனால், சச்சின் அனைத்து விதமான போட்டிகளிலும் அசத்தியுள்ளார். டெஸ்ட்(175 போட்டி, 50 சதம், 14513 ரன், 56.91 சராசரி) மற்றும் ஒரு நாள் போட்டிகளில்(442 போட்டி, 46 சதம், 17,598 ரன், 45.12 சராசரி) அதிக ரன், அதிக சதம் அடித்து முதலிடத்தில் <இருக்கிறார். ஐ.பி.எல்., "டுவென்டி-20' போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார். தன்னைப் போலவே சச்சின் பேட் செய்வதாக மறைந்த பிராட்மேனே வாயார பாராட்டியுள்ளார். யார் சிறந்த வீரர்: இந்தச் சூழலில் டெஸ்டில் 50வது சதம் அடித்து சச்சின் சாதனை படைத்தவுடன், மீண்டும் பிராட்மேனோடு ஒப்பிட்டு பேசுகின்றனர். இவர்களில் யார் சிறந்த வீரர் என்பது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் "சிட்னி மார்னிங் ஹெரால்டு' பத்திரிகை "இன்டர்நெட்' மூலம் கருத்துக் கணிப்பு நடத்தியது. மொத்தம் 20,768 ரசிகர்கள் ஓட்டு அளித்தனர். இதில், சச்சின் 67 சதவீத ஓட்டுகளுடன் வெற்றி பெற்றார். பிராட்மேனுக்கு 33 சதவீதம் பேர் ஓட்டு அளித்தனர். சச்சினுக்கு ஆதரவாக ஓட்டு அளித்துள்ள ரசிகர்கள் கூறியுள்ள கருத்து: பிராட்மேனை விட சச்சின் தான் சிறந்த வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. அனைத்து நாடுகளிலும், பல்வேறு வகையான ஆடுகளங்களில் விளையாடியுள்ளார். உலகின் முன்னணி பவுலர்களை சமாளித்து, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன் குவித்துள்ளார். பிராட்மேனை பொறுத்தவரை ஒரு அணிக்கு எதிராக தான் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் டெஸ்டில் எடுத்துள்ள 6, 996 ரன்களில் இங்கிலாந்துக்கு எதிராக மட்டும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான ரன் சேர்த்துள்ளார். நான்கு அணிகளுக்கு எதிராக மட்டுமே விளையாடியுள்ளார். அதிவேக பந்துவீச்சாளர்களை அவர் சந்திக்கவில்லை. தொழில்நுட்பம் வளர்ந்த நவீன சூழலில் சச்சின் விளையாடுகிறார். தற்போது வீரர்களின் ஒவ்வொரு அசைவும் வீடியோ "ரீப்ளே' மூலம் அலசி ஆராயப்படுகிறது. இருப்பினும், சச்சினின் ரன் வேட்டையை எந்த ஒரு அணியாலும் தடுக்க முடியவில்லை. ஒரு நாள் போட்டியில் ஒரே இன்னிங்சில் 200 ரன், டெஸ்டில் 50 சதம், ஒட்டுமொத்தமாக 30 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்கள் என்று சச்சினின் சாதனையை அடுக்கிக் கொண்டே போகலாம். எனவே, பிராட்மேனை விட அனைத்து விதத்திலும் சச்சின் தான் சிறந்தவர். இவ்வாறு அந்த ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். பிராட்மேனுக்கு ஆதரவான ரசிகர்கள் தெரிவித்த கருத்து: ஓட்டு அளித்தவர்களில் நிறைய பேர் இந்தியர்களாக இருப்பார்கள் என நம்புகிறோம். அதனால் தான் சச்சினுக்கு ஆதரவு காணப்படுகிறது. நவீன வசதிகள் இல்லாத காலத்தில் அசத்தியவர் பிராட்மேன். மோசமான ஆடுகளங்களில் "ஹெல்மெட்' கூட அணியாமல் விளையாடியவர். டெஸ்டில் யாரும் நெருங்க முடியாத சராசரியை(99.94) கொண்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். ஒப்பீடு தேவையில்லை: சச்சின்-பிராட்மேன் ஒப்பீடு தேவையில்லாதது என சில ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் கூறுகையில்,""வெவ்வேறான காலக்கட்டத்தில் சச்சின் மற்றும் பிராட்மேன் விளையாடியுள்ளனர். எனவே, இருவரையும் ஒப்பிடுவது முட்டாள்தனமானது. இது கால்பந்து உலகில் பீலே மற்றும் மாரடோனாவை தேவையில்லாமல் ஒப்பிடுவதற்கு நிகரானது,''என, தெரிவித்துள்ளனர். இரண்டாவது இடம் டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் இந்திய வீரர் சச்சின் இரண்டாவது (880 புள்ளி) இடத்துக்கு முன்னேறியுள்ளார். இலங்கை வீரர் சங்ககராவின் முதலிடத்தை பிடிக்க (882) சச்சினுக்கு 2 புள்ளிகள் மட்டுமே தேவை. இந்தியாவுக்கு எதிராக இரட்டை சதம் அடித்த காலிஸ் (846), மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார். இந்தியாவின் சேவக் (832), லட்சுமண் (725) முறையே 4, 15வது இடத்தில் உள்ளனர்.
Leave a Reply